மயிலாடுதுறை அருகே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடும் புகைப்படத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், வனத்துறையின் கள நடவடிக்கைகளுக்கு கூட்டம் சேர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் ஏப்.2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் போலீஸார், அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். செம்மங்குளம் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆரோக்கியநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டம் மற்றும் அதன் நகர்வுகள் 16 சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிறுத்தையைப் பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 5 சிறப்பு அதிகாரிகள் வந்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அச்சம் அடைய வேண்டாம். இரவில் வெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமாக இருப்பதால் பகலில் சிறுத்தை நடமாட்டம் இருக்காது. இரவு நேரத்தில் நடமாட்டம் இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடும் புகைப்படத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த 3ம் தேதி அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் கள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கூட்டம் சேர்ந்து கள நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம். சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்தவித தகவல் கிடைத்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கும்படியும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்கு முடக்கம்... வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி!
கோவையில் ரூ.3.54 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது!
கிளம்பிட்டாரு நவரச நாயகன் கார்த்திக்... அதிமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரமாம்!
11 வயதில் வீட்டை விட்டு அனுப்பி வைத்தார்கள்...மனம் உடைந்த பிரபல நடிகர்!