யாருடைய கருணையும் இல்லை… சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! - பேரறிவாளன் விடுதலை குறித்து தலைவர்கள் கருத்து

யாருடைய கருணையும் இல்லை… சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! - பேரறிவாளன் விடுதலை குறித்து தலைவர்கள்  கருத்து
பேரறிவாளன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்தது. தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்த தீர்ப்பை பல்வேறு கட்சி தலைவர்கள் வரவேற்றுள்னர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து ஜனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," 31 ஆண்டுகால போராட்டம் உச்ச நீதிமன்றத்தால் முடிவுக்கு வந்துள்ளது. யாருடைய கருணையின் அடிப்படையில் அல்லாமல், சட்டபூர்வமாக அவர்கள் நிவாரணம் பெற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் கருத்தாக இருந்தது. இப்போது, சட்டபூர்வமாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸுக்கு இதில் மாற்று கருத்து இல்லை" என தெரிவித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், "பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறுகையில், "தமிழ்நாடு எதிர்பார்த்து இருந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது; ஆளுநரின் தவறான செயல்பாடு காரணமாக விடுதலை தாமதப்படுத்தப்பட்டது. தாய் அற்புதம்மாள் எடுத்த முயற்சி கொஞ்சம் நஞ்சம் அல்ல; அனைத்து குடிமக்கள் போல இயல்பு வாழ்க்கையை பேரறிவாளன் வாழ வேண்டும்; மக்களுக்கு பணியாற்ற வேண்டும்" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பதிவில், "அரசியல் சாசன அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், "மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எச்.எம். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்," தனி ஒரு பெண்ணாக நீதி கேட்டுப் போராடி அதில் வெற்றி கண்டுள்ள அற்புதம்மாளுக்கும், 31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையைச் சுவாசிக்கும் பேரறிவாளனுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தீர்ப்பிலிருந்து படிப்பினைப் பெற்று தமிழ்நாட்டு ஆளுநர் தமிழ்நாட்டு அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in