‘சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும்’ என அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளதை, செட்டிநாட்டுப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
இன்று தமிழக சட்டப்பேரவையில், சட்டம் மற்றும் சிறைத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அரசு சட்டக் கல்லூரிகளில் அதிவேக இணைய வசதியுடன் கூடிய கம்பியில்லா மின் மண்டலம் நிறுவப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.
அரசு சட்டக் கல்லூரிகளில் சர்வதேச பயிற்சிப் பட்டறைகள் கருத்தரங்குகள் மற்றும் சட்ட மாநாடுகள் நடத்தப்படும் என அறிவித்த அமைச்சர், திருமயத்தில் சார்பு நீதிமன்றமும் தென்காசியில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றமும் அமைக்கப்படும் என அறிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் எனவும் அறிவித்த அமைச்சர், சிறைகளில் கரோனா தொற்று இல்லை என்றும், சிறைவாசிகளுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் சொன்னார்.
தமிழகத்தில் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சிறைச்சாலைகள் அமைக்கப்படும் எனக் கூறிய ரகுபதி, சிறைகளை சீர்திருத்த மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
அழகப்பா பல்கலைக் கழகம் அமைந்துள்ள காரைக்குடியில் சட்டக் கல்லூரியும் மருத்துவக் கல்லூரியும் இல்லை என்பது செட்டிநாட்டுப் பகுதி மக்களின் நெடுநாளைய ஆதங்கம். அந்த ஆதங்கத்தைப் போக்கும் வகையில், செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ரகுதிபதி, காரைக்குடிக்குயில் சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்திருப்பதை செட்டிநாட்டுப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.