மக்களே, உங்க ஊருக்கே வந்துவிட்டது நடமாடும் மருத்துவ சேவை வாகனம்

மக்களே, உங்க ஊருக்கே வந்துவிட்டது நடமாடும் மருத்துவ சேவை வாகனம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி செலவில் சென்னையில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் பொதுசுகாதார தரப்பில் இருந்து பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மலைக்கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் மற்றும் சிறு, குறு பகுதிகள் என அனைத்து பகுதிகளுக்கும், மக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரடியாக மருத்துவ ஆம்புலன்ஸ்களை கொண்டு சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலை கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.70 கோடி மதிப்பில் 389 சிகிச்சை வசதிகளுடன் கூடிய வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆம்புலன்சில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.