‘பள்ளிக்குள் ஹிஜாப், காவிக்கு அனுமதி கூடாது’: குஷ்பூ கருத்து!

‘பள்ளிக்குள் ஹிஜாப், காவிக்கு அனுமதி கூடாது’: குஷ்பூ கருத்து!
குஷ்பூ

’பள்ளிக்குள் ஹிஜாப், காவி என எந்த மத அடையாளங்களுக்கும் அனுமதி கூடாது. பள்ளி நிர்வாகம் விதித்திருக்கும் சீருடை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும்’ என்கிறார் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான குஷ்பூ.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, கட்சி நிர்வாகியான குஷ்பூ வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த குஷ்பூ, கர்நாடக ஹிஜாப் விவகாரம் குறித்தும் பதிலளித்தார்.

”ஹிஜாப் அணிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட தெரிவு” என்ற குஷ்பூ, ”பள்ளிகளில் அனைவருக்கும் பொதுவான சீருடை இருக்கும்போது அங்கே ஹிஜாப்புக்கு அவசியமில்லை” என்றார். அடிப்படையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், ஹிஜாப் விவகாரத்தை சுற்றியே குஷ்பூவுக்கான கேள்விகள் எழுந்தன. அந்த கேள்விகளுக்கு பதிலளித்த குஷ்பூ, ”பள்ளிக்குள் எந்தவொரு மதமோ, சாதியோ நுழைய அனுமதி இல்லை. பள்ளி விதித்த சீருடையுடன் மட்டுமே மாணவ மாணவியர் செல்ல வேண்டும். ஹிஜாப் அணிந்தவர்கள் அதனை பள்ளி வாசல் வரை மட்டுமே அணிந்து செல்லலாம். பள்ளிக்குள் ஹிஜாப், காவி என எதற்கும் அனுமதி கூடாது. பள்ளியில் படித்த காலத்தில் நானோ என்னுடன் பயின்றவர்களோ பள்ளிக்குள் ஹிஜாப் அணிந்து சென்றதில்லை” என்றார்.

பாஜகவினர் மத ரீதியிலான வேறுபாடுகளை மாணவர்கள் மத்தியில் விதைப்பதாக, எதிர்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் அப்போது குஷ்பூ மறுத்தார். “எதிர்க்கட்சிகள்தான் சாதி, மத வேறுபாடுகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கின்றன. பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரவேண்டாம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்; மாறாக எவரையும் பள்ளிக்கே வரவேண்டாம் என்று சொல்லவில்லை.” என்றார். மேலும் ”மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வது தவறு என்பதுபோலவே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் காவி அணிந்து சென்றதும் தவறுதான்” என்றும் விளக்கம் தந்தார் குஷ்பூ.

Related Stories

No stories found.