பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி; குவிந்த கூட்டம்... கடைக்கு பூட்டு போட்ட போலீஸார்!

குளித்தலை  பிரியாணி கடை
குளித்தலை பிரியாணி கடை

குளித்தலையில் பழைய 1, 2, 5 மற்றும் 10 பைசா நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் கடையின் முன் மக்கள் குவிந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிக்கன் பிரியாணி
சிக்கன் பிரியாணி

அசைவ உணவுகளில் பிரியாணிக்கு என்று எப்போதும் பெரும் வரவேற்பு உள்ளது. பலர் வாரத்திற்கு ஒருநாளாவது பிரியாணி சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் சிலர் வாரத்தில் 4 அல்லது 5 நாளாவது பிரியாணி சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவுக்குப் பிரியாணி என்பது மக்களின் உணவில் முக்கிய இடம்பிடித்த உணவாகிவிட்டது. அதனாலேயே வீட்டு விசேஷங்களில் கூட பலர் பிரியாணி விருந்து வைக்கத் தவறுவதில்லை.

இப்படியான சூழலில், மக்களைக் கவர நினைக்கும் உணவகங்கள் அதிரடி ஆஃபர் மூலம் பிரியாணி விற்பனை செய்வார்கள் அல்லது இலவசம் என்பதற்கு மாற்றாக நூதன முறையில் பிரியாணி வழங்குவார்கள். அப்படி ஒரு பிரியாணிக் கடையின் அறிவிப்பு, அந்த கடைக்கே உலைவைத்து விட்டது

குளித்தலை பிரியாணி கடை
குளித்தலை பிரியாணி கடை

கரூர் மாவட்டம் குளித்தலையில், கரூர் - திருச்சி பழைய நெடுஞ்சாலைக்கு அருகே ஆர்.ரஹ்மான் திண்டுக்கல் பிரியாணி என்ற பெயரில் புதிய கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. தங்களது கடையைப் பிரபலப்படுத்த, யுக்தி ஒன்றை அந்த கடை நிர்வாகம் கையாண்டது. அதாவது உணவுத் திருவிழா என்ற பெயரில் மூன்று நாட்களுக்குப் பிரியாணி திருவிழா நடத்தப்பட்டது. அதில், ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒருநாள் மட்டும் 1 பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசாக்களில் ஏதேனும் ஒரு காசை கொடுத்தால் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான போஸ்டர்களும் ஊர் முழுக்க ஒட்டப்பட்டது. இந்த போஸ்டர்களை பார்த்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்த பழைய காசுகளைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்தனர்.

குளித்தலை பிரியாணி கடை
குளித்தலை பிரியாணி கடை

இதனால், குளித்தலை முக்கிய சாலையில் பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதோடு, பிரியாணி வாங்க நீ, நான் என வாடிக்கையாளர்கள் போட்டிப் போட்டதால், அங்கு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸார் அங்கு விரைந்து சென்று, கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். பிறகு அங்கே கூடியிருந்த அனைவரையும் பிரியாணி இல்லை எனக் கூறி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். காலை 9 மணி முதல் காத்திருந்ததாகவும், முறையான முன்னேற்பாடு இல்லாமல் கூட்டத்தைக் கூட்டிய கடை உரிமையாளர் மீது பிரியாணி பிரியர்கள் புகார் தெரிவித்து ஏமாற்றத்துடன் சென்றனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in