திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நசீரா தாவூத், திண்டுக்கல்லில் பிறந்திருந்தாலும் பள்ளி படிப்பை முடித்தவுடன் பெங்களூருவில் மருத்துவம் பயின்று மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவ படிப்பை முடித்து அமெரிக்காவில் மருத்துவராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற இவர் அங்கு பொறியாளராக பணியாற்றி வந்த பில் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஆண்டு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இதையடுத்து, திருமணத்தை தனது சொந்த ஊருக்கு அருகே உள்ள கொடைக்கானலில் நடத்த திட்டமிட்ட நசீரா, நேற்று கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது காதலர் பில்லை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் தம்பதியினரின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்.
இதில் ருசிகரமாக நசீரா மற்றும் பில் ஆகிய இருவரும் மதம், இனம், மொழி கடந்து காதலித்த நிலையில் அவர்களுடைய திருமணம், காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடைபெற்றது. மும்மதத்தை பறைசாற்றி, பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இத்திருமணம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...