
தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார். இதில் உயர்கல்வித்துறையின் புதிய மைல்கல்லாக அறிவுசார் நகரம் திட்டம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவிக்கையில், ‘உயர்கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் உலகளாவிய புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் கிளையோடு அறிவுசார் நகரம் அமைக்கப்படும். இதில் ஆராய்ச்சி, மேம்பாடு, அறிவுசார் தொழில் மேம்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். தமிழக பொதுத்துறை நிறுவனங்களான தொழில் வளர்ச்சி நிறுவனம், சிட்கோ போன்றவையும் இதில் முக்கியப்பங்கு வகிக்கும். தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு கல்லூரிகளில் கல்வி கட்டமைப்பை மேம்படுத்த புதிய வகுப்பறை, விடுதி, ஆய்வகம் ஆகியவற்றை அமைக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். நடப்பாண்டில் இதற்கு 250 கோடி ஒதுக்கப்படும். அரசுப்பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம்கிடைத்தவர்களுக்கு கட்டணம் செலுத்த ஏதுவாக நடப்பாண்டில் 204 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.