கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழா! : முதல்வர் அறிவிப்புக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு

கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழா! : முதல்வர் அறிவிப்புக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் வரவேற்றுப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 110- விதியின் கீழ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், " கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் அரசின் தோட்டத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும்" என்றும் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் வரவேற்றார். அப்போது அவர் பேசுகையில், " முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு உறுதுணையாக இருந்தவர் என்றும், அனைத்து கமலாலயத் தலைவர்களோடும் கூட்டணி வைத்து, காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டு காலம் நடத்த உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி" என்றும் கூறினார். "அரசியல் மாண்பின் வழியாக இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்" என்று கூறினார்.

பாமக சார்பில் ஜி.கே.மணி பேசுகையில், " மக்கள் உரிமைக்காக போராடிய போராளியாவும், கூட்டணியில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான் என்று ராமதாஸ் கூறுவார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கருணாநிதியை அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி பேசுகையில், " தமிழ்நாட்டில் அரசியல் செய்தாலும் யார் பிரதமராக வரவேண்டும், ஜனாதிபதியாக வரவேண்டும் என்று இருந்த இடத்திலேயே ரிமோட் மூலம் இயக்கியவர் கருணாநிதி" என்று புகழாரம் சூட்டினார்.

விசிக உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசுகையில், " திருவள்ளுவனை தமிழ் சமுகம் நினைப்பது போல கருணாநிதி நினைவில் இருப்பார். தமிழர்களை தலைநிமிர்த்தியவராகவும், பன்முகை தன்மை கொண்டவராகவும் திகழ்ந்தார்" என்று கூறினார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், " வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி வேலைவாய்ப்பு உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. அவர் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதியை அரசு விழாவாக கொண்டாவதை எங்கள் கட்சி வரவேற்கிறது" என்று கூறினார்.

"அனைத்து மாவட்டங்களிலும் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும்" என்று கொங்குநாடு மக்கள் தேசியகட்சி ஈஸ்வரன் வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வபெருந்தகை, மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அப்துல் சமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து ஆகியோரும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுப் பேசினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in