கருணாநிதியின் நிழலாக இருந்த சண்முகநாதன் மறைந்தார்

கருணாநிதியின் நிழலாக இருந்த சண்முகநாதன் மறைந்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்த அவரது உதவியாளர் கோ.சண்முகநாதன் காலமானார். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் சாட்சியமாக இருந்தவர் சண்முகநாதன்.

சுருக்கெழுத்தராகப் பணியாற்றிய சண்முகநாதனின் பணிகளைப் பார்த்து வியந்த கருணாநிதி, 1969-ல் அவரைத் தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் கருணாநிதி எழுதும் கட்டுரைகள் கடிதங்களைத் தொகுப்பது சண்முகநாதனின் முக்கியமான பணியாக இருந்தது. ‘முரசொலி’யில் எந்த வருடத்தில் என்ன பிரசுரமானது என்பதைக் கருணாநிதிக்கே துல்லியமாக நினைவுபடுத்திச் சொல்லும் அளவுக்கு நினைவாற்றல் மிக்கவராக இருந்தார். எம்ஜிஆர் முதல்வரான பின்னர், தன்னிடம் உதவியாளராகச் சேருமாறு அழைப்பு விடுத்தபோது அதை ஏற்க மறுத்தவர் சண்முகநாதன். அந்த அளவுக்குக் கருணாநிதியுடனான அவரது பந்தம் பிரிக்க முடியாததாக இருந்தது.

கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மட்டுமல்ல, அவர் முதல்வரான பின்னரும் மக்கள்தொடர்புத் துறை அதிகாரிகள் இருந்தபோதும் தனிப்பட்ட உதவியாளராக அவருடன் கூடவே இருப்பார். அவரது உரைகளைக் குறிப்பெடுத்துக்கொள்வார்.

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தினந்தோறும் வந்து அவருக்கு உதவியாக இருந்துவந்த சண்முகநாதனுக்கு, அங்கேயே தனி அறையும் தரப்பட்டிருந்தது. அங்கிருந்தபடி தட்டச்சுப் பணிகள் உள்ளிட்ட பணிகளைச் செய்துவந்தார். கருணாநிதியின் மறைவுக்குப் பின்னரும் அவரது ‘முரசொலி’ கடிதங்களைத் தொகுக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

அவரது மறைவுக்குத் திமுக தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.