காங்கிரஸாருக்கு கார்த்தி சிதம்பரம் ஏற்பாடு செய்த டூர்!

டெல்லி டூர் வந்தவர்களுடன் கார்த்தி...
டெல்லி டூர் வந்தவர்களுடன் கார்த்தி...

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தனக்கும் கிடைக்கலாம் என கார்த்தி சிதம்பரம் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக புகார்களை அடுக்க சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஒரு கோஷ்டி டெல்லிக்குக் கிளம்பி இருக்கிறது. கார்த்தி எதிர்ப்பாளர்கள் இதற்காக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருப்பது தெரிந்ததும் கார்த்தி தரப்பிலிருந்தும் ஆட்களை திரட்டி இருக்கிறார்கள். ராகுலைச் சந்திக்கலாம் என்று சொல்லி சிவகங்கை, மானாமதுரை தொகுதிகளைச் சேர்ந்த 55 பேரை ரயிலில் ஏ.சி. கோச்சில் டெல்லிக்கு அழைத்துச் சென்றாராம் கார்த்தி.

அன்பளிப்பு அசத்தல்...
அன்பளிப்பு அசத்தல்...

இப்படியொரு மூவ் நடப்பது தெரிந்ததும் முன்னமே படை திரட்டிய எதிர்க்கோஷ்டி டெல்லி சலோவை தற்காலிகமாக கிடப்பில் போட்டுவிட்டதாம். டெல்லியில், தனியார் ஹோட்டலில் 27 அறைகள் புக் செய்யப்பட்டு அங்கே அந்த 55 பேரும் தங்கவைக்கப்பட்டார்களாம். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அனைத்து சமாச்சாரங்களும் கேட்காமலே வந்துகொண்டிருந்ததாம்.

வந்தவர்களை அறைக்குள்ளேயே பூட்டிவைக்காமல் ஏ.சி. பஸ் பிடித்துக்கொடுத்து டெல்லியைச் சுற்றிப்பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தாராம் கார்த்தி. டெல்லியில் ப.சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தான் இப்போது கார்த்தியும் தங்குகிறார். தொகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட காங்கிரஸ் மக்களுக்கு அந்த வீட்டில் ஒரு நாள் விருந்தும் கொடுத்தாராம் கார்த்தி.

ராகுலுடன் போட்டோ...
ராகுலுடன் போட்டோ...

விருந்தின் போது அங்கே பிரசன்னமான ப.சிதம்பரம், அங்கு வந்திருந்த அத்தனை பேரையும் தனித்தனியாக தேடித் தேடிப் போய் பார்த்து குசலம் விசாரித்தாராம். இந்த விசாரிப்புகள் முடிந்ததும் சிவகங்கை மக்களுக்கு உலர் பழங்கள் உள்ளிட்ட அன்பளிப்புகளையும் கொடுத்து அசத்தினாராம் கார்த்தி. இத்தனையும் நடந்தாலும் அத்தனை பேரும் ராகுலைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லையாம்.

அதனால், ராகுல் பாராளுமன்றத்துக்கு வருகின்ற நேரத்தில் அவரது கார் நிறுத்தும் இடத்தில் சிவகங்கை மக்களை நிற்கவைத்து அவர்களை ராகுலுடன் நின்று படமெடுக்க வைத்தாராம் கார்த்தி. ஒருவழியாக ஒரு வார ட்ரிப்பை சுகமாக முடித்துக் கொண்டு திரும்பிய சிவகங்கைக்காரர்கள், “எங்களுக்கான ஒரு நாள் செலவு மட்டுமே அஞ்சு லட்சம் இருக்கும்பே” என்று வாய்பிளக்கிறார்கள்.

ராகுலுடன் போட்டோ...
ராகுலுடன் போட்டோ...

எதிர்க்கோஷ்டியோ, “தேர்தல் வரப்போகுதுல்ல... இதுவும் நடக்கும். இதுக்கு மேலயும் நடக்கும். என்ஜாய்...” என்று ஏகத்துக்கும் கிண்டலடிக்கிறதாம். அடுத்ததாக தொகுதியில் உள்ள இன்னும் இரண்டு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தில் இருக்கிறாராம் கார்த்தி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in