
கந்துவட்டிக் கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை அடுத்து ‘கந்துவட்டி ஆபரேஷன்’ நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் காவலர்கள் மத்தியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், “ தமிழகத்தில் அதிகப்படியான கந்துவட்டி வாங்கும் நபர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’ நடத்த வேண்டும் “ என்று கூறியுள்ளார்
மேலும்,” கந்துவட்டி தொடர்பாக காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள புகார்களை உடனடியாக எடுத்து சட்ட ஆலோசனைக்கு அனுப்பி, அதன் பின்பு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று கந்துவட்டி வசூலிக்கும் அலுவலகத்தைச் சோதனை செய்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.