நீர் மேலாண்மை இல்லாததால் நிலைகுலைந்த குமரி!

நீர் மேலாண்மை இல்லாததால் நிலைகுலைந்த குமரி!
மீட்புப் பணிகள்...

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை விவசாயிகளைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. பெருமழையில் விவசாயப் பாதிப்பு ஒருபுறம் இருக்க, குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துகொண்டதால் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டது குமரி.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் குமரி மாவட்டம் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட நீர்மேலாண்மை, காலப்போக்கில் கைவிடப்பட்டதுதான் குமரிக்கு இந்தச் சிக்கல் ஏற்படக் காரணம் என விமர்சனக் குரல்கள் எழுகின்றன.

பொன்னம்பலம்
பொன்னம்பலம்

குமரி மாவட்டத்தில், பெருமழையினாலும் அதன் தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் முடங்கிப்போயின. பல பகுதிகள் தீவுகளைப் போல் காட்சியளித்தன. நடவுசெய்து ஒரே மாதத்தில் வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கிக்கிடக்கின்றன. இன்றைய தலைமுறை, இதுவரை சந்தித்திராத இந்தப் பெருமழை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளையும் அதற்கான காரணிகளையும் அலசுவது அவசியமாகிறது.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற வேளாண்மை விற்பனைத் துறை அதிகாரி பொன்னம்பலத்திடம் பேசினோம்.

“குமரி மாவட்டத்தின் நீர்மேலாண்மையை, மாவட்டத்தின் ஜீவாதாரமான பேச்சிப்பாறை அணையை உருவாக்குவதற்கு முன்பு, உருவாக்கிய பின்பு, குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த பின்பு என 3 வகைகளாக அணுக வேண்டியது அவசியம்” என்று பேசத் தொடங்கினார் பொன்னம்பலம்.

கேள்விக்குறியான பராமரிப்பு

“மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வடிந்தோடிவரும் தண்ணீர் ஆறு, குளங்களை நிறைத்து வங்காள விரிகுடாவிலும், அரபிக்கடலிலும் கலக்குமாறு குமரி மாவட்ட நீர்மேலாண்மை அமைக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு குமரி மாவட்டம் இருந்தபோது, ஒட்டுமொத்த கேரள மக்களின் நெல் தேவைக்கும் இங்கே இருந்துதான் அரிசி செல்லும். அரிசி தேவைக்கு நெல் தரும் குமரியை மன்னர்கள் காலத்தில் நீர் மேலாண்மையிலும் கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொண்டனர்.

பொதுவாக மற்ற ஊர்களில் அணைக்கு அருகில் இருக்கும் குளங்களை எல்லாம் நிறைத்துவிட்டுத்தான் கடைவரம்புப் பகுதிக்குத் தண்ணீர் வரும். ஆனால், இங்கே மன்னர்கள் கால முறைப்படி கடைவரம்புப் பகுதியான கன்னியாகுமரி குளத்தில்தான் முதலில் தண்ணீரை நிறைப்பார்கள். கடைவரம்பில் தொடங்கி அணையின் அருகாமை நீராதாரங்களுக்குப் படிப்படியாகத் தண்ணீர் வழங்குவது நடக்கும். இதேபோல் மன்னர்கள் காலத்தில் நீராதாரங்கள் முழுக்கவே விவசாயிகளின் கையிலேயே இருந்தது.

நாகர்கோவில் நகர்ப்பகுதியில்...
நாகர்கோவில் நகர்ப்பகுதியில்...

மழை நேரங்களில் குளங்களின் வரப்புப் பகுதிகள் உறுதியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு திசைக்காவல், லஸ்கர் என மன்னர்கள் காலத்தில் பணிகள் இருந்தன. குமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்த பின்னர் இந்த நீர் மேலாண்மை முறைகளை எல்லாம் முற்றாக மாற்றிவிட்டனர். பொதுப்பணித் துறையின்கீழ் நீராதாரங்கள் போன பின்பு, பராமரிப்பும் கேள்விக்குறியாகிவிட்டது. மழை இல்லாத காலங்களில் மதகுகளைச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் மறந்துவிட்டார்கள்.

மன்னர்கள் காலத்தில் வரத்துக்கால், புறத்துக்கால் என ஒவ்வொரு நீராதாரத்திலும் சிறப்பான வசதியைச் செய்திருந்தார்கள். வரத்துக்காலின் வழியாகத் தண்ணீர் வரும். குளம் நிரம்பியதும் புறத்துக்காலின் வழியாகக் கூடுதலாக வரும் நீரை வெளியேற்ற வேண்டும். இந்த மழையில் பலரும் தங்கள் குளத்தின் புறத்துக்கால் எங்கே இருக்கிறது எனத் தேடிக்கொண்டிருந்த சம்பவங்களும் அரங்கேறின. அதுவும் பல ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துவிட வழிவகுத்தது” என்கிறார் பொன்னம்பலம்.

இதேபோல் நாகர்கோவிலில், இப்போது அண்ணா ஸ்டேடியமாக இருப்பது கள்ளர் குளம். அண்ணா பேருந்து நிலையமாக உருப்பெற்று நிற்பது இடையர் குளம். வெளியூர் பயணங்களுக்கென வடசேரியில் இருக்கும் கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், பெருமாள்குளமாக இருந்ததுதான். இப்படியெல்லாம் குளங்களை வளர்ச்சி எனும் பெயரில் மூடிவிட்டு, ஊருக்குள் தண்ணீர் வந்துவிட்டது என புலம்புவதில் மட்டும் என்ன நியாயம் இருக்கிறது.

லால் மோகன்
லால் மோகன்

ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்

இப்படியான சூழல் குமரிக்கு வரும் எனத் தொடர்ந்து எச்சரிக்கைக் குரல் எழுப்பிவருபவர், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதுநிலை விஞ்ஞானி லால்மோகன். அவரிடம் பேசினோம்.

“விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றக் கூடாது, நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தினோம். முன்னாள் எம்எல்ஏ ஒருவர், நாகர்கோவில் நகர்ப்பகுதியை ஒட்டியிருந்த விவசாய நிலங்களை எல்லாம் காலி மனைகளாக மாற்றினார். அதற்கு எதிராக நான் சட்டப்போராட்டம் நடத்தியபோது என் வீட்டிற்கு வந்த அவர், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினார்.

என்னிடம் ஒரு முன்னாள் ஆட்சியரே, “குமரியில் வீடுகட்ட வேறு நிலம் இல்லையே” எனச் சொன்னார். அவர்களின் புரிதலுக்கு எல்லாம் இந்தப் பெருவெள்ளம் பாடம் நடத்தியிருக்கிறது. குளங்கள், நீராதாரங்கள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்த கிராமங்களில் வசிப்பவர்களைவிட, புறநகர்ப் பகுதிகளில் விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக்கியோரே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகினர். வீடுகளை விட்டு வெளியே வரவே முடியாத சூழலில் சிக்கிக்கொண்டனர்.

ரியல் எஸ்டேட் மாஃபியாக்களால்தான் குமரிக்கு இந்த நிலை. சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்றுக்கொண்டு இதற்குத் துணைபோகிறார்கள். விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற வேண்டுமெனில், தனி ஆணையம் அமைத்து அதனிடம் அனுமதிபெற வேண்டும் எனச் சட்டம் கொண்டுவர வேண்டும். மொத்தத்தில் இந்த வெள்ளச்சேதமே மனிதப்பிழைதான்’’ என்றார் லால்மோகன்.

கூடுதல் இழப்பீடு வேண்டும்!

விவசாயிகளின் துயரோ இன்னும் கொடூரம். அதுபற்றி நம்மிடம் பேசிய தெரிசனங்கோப்பு கிராமத்தைச் சேர்ந்த மாதேவன், “நடவு செய்து ஒரு வாரம் ஆனதிலிருந்து ஒரு மாதம் வரையிலான நெற்பயிர்கள் இருக்கும் காலம் இது. அவை முழுதாக மூழ்கிவிட்டன. பலருக்கு விதைத்த நெல்லையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. வெள்ளம் வடிந்தாலும் கூடுதல் உரம் போட வேண்டியிருக்கும். இதனால் விவசாயிகள் பலரும் விரக்தியின் விளிம்புக்கே போய்விட்டார்கள். நடவு செய்ததுமே இப்படி நடந்துவிட்டதால் இந்த போகத்தில் கிடைத்தது போதும் எனும் மனநிலையிலும் பலரும் தள்ளப்பட்டுவிட்டனர். அரசு அறிவித்திருக்கும் இழப்பீட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்தினால் ஏதாவது சமாளிக்கலாம்” என்றார்.

மொத்தக் குமரியும் பெருவெள்ளத்தில் தத்தளித்தத் தருணத்தில், பறக்கை கால்வாய் மட்டும் வறண்டே கிடந்தது. இந்தப் பறக்கை கால்வாய் பழையாற்றில் இருந்து சுசீந்திரம் பெரிய குளத்திற்கும், பறக்கை குளத்திற்கும் தண்ணீர் செல்லும் கால்வாய். இந்தப் பாதை முழுவதும் நீண்டகாலமாகப் புதர்மண்டி இருந்ததால் இந்த வழியே நீர் செல்ல முடியவில்லை. நீர், தன் வழித்தடத்தின் ஒருபகுதியை இழந்ததால் சுசீந்திரம் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருசேரக் காட்சியளிக்கும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலுக்குள்ளும் முட்டியளவுக்குத் தண்ணீர் புகுந்தது.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பேசும் அமைச்சர் மனோ தங்கராஜ்
அனைத்து கட்சிக் கூட்டத்தில் பேசும் அமைச்சர் மனோ தங்கராஜ்

குமரியின் பெருவெள்ளப் பணிகளை முடுக்கிவிட்ட மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ‘இனிவரும் காலங்களில் மழையினால் அழிவு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குளங்களை உடனே தூர்வாருவது’ எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை விரைந்து செய்துமுடிக்க வேண்டும் என்பதே, குமரி மக்களின் இப்போதைய குரலாக இருக்கிறது.

Related Stories

No stories found.