சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: கனிமொழி சொன்ன நம்பிக்கை வார்த்தைகள்!

கனிமொழி எம்.பி-யை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கும் ஜஸ்டின் ஆண்டனி
கனிமொழி எம்.பி-யை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கும் ஜஸ்டின் ஆண்டனி

சீஷெல்ஸ் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

கடந்த பிப்ரவரி மாதம் தேங்காய்பட்டணம் மற்றும் கொச்சியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த டொணோ, இன்பேன்ட் ஜீஸஸ், ஸ்நாபக அருளப்பர், வித்யா, வாடிமாதா ஆகிய 5 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 61 மீனவர்கள் சீஷெல்ஸ் நாட்டுப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இம்மீனவர்களின் உறவினர்களின் வேண்டுகோளின்படி சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆன்டணி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கும் சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கும் வேண்டுகோள் வைத்தார்.

மத்திய மாநில அரசுகளும், இந்திய தூதரகமும் எடுத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் மார்ச் 22-ம் தேதி விசைப்படகுகளின் 5 கேப்டன்களைத் தவிர 56 மீனவர்களும் அபராதமின்றி விடுதலை செய்யப்பட்டு, அரசு செலவில் தனி விமானத்தில் இந்தியா கொண்டுவரப்பட்டனர். பின்னர் இந்த 56 மீனவர்களும் தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

மீதமுள்ள 5 மீனவர்களுக்கும் (படகின் கேப்டன்கள்) மார்ச் 22-ம் தேதியிலிருந்து 15 நாட்களும், பின்னர் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து 14 நாட்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 19-ம் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறது. இவர்களை மீட்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஜஸ்டின் ஆன்டணி அனுப்பிய மனு, குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து தகுந்த நடவடிக்கை எடுக்கக்கேட்டு உரிய துறைக்கு அனுப்பப்பட்டது.

சிறையிலுள்ள இந்த 5 கேப்டன்களை விடுவிக்கக்கோரி பிரதமர், உள் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், மத்திய மீன்வளத் துறை அமைச்சர், தமிழக முதல்வர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “இவர்களைக் காணாமல் வயதான நோய்வாய்ப்பட்ட பெற்றோர், குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். இவர்களையும் படகுகளையும் மீட்க இந்திய அரசு சீஷெல்ஸ் அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த 5 மீனவர்களையும் படகுகளையும் மீட்க ஆவன செய்ய வேண்டி மக்களவை உறுப்பினர் கனிமொழியை, ஜஸ்டின் ஆன்டணி தலைமையிலான குழுவினர் சந்தித்து வேண்டுகோள் வைத்தனர்.

கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி, ‘5 மீனவர்களையும் படகுகளையும் மீட்டுவர என்னாலான உதவிகளை செய்வேன். அனைவரும் தாய்நாட்டுக்கு உடனடியாக வந்துசேர்வார்கள்’ எனத் தெரிவித்ததாக, ஜஸ்டின் ஆன்டணி கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in