ஜான்டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க முடியாது

உறுதி காட்டிய உயர்நீதி மன்றம்
ஜான் டேவிட்
ஜான் டேவிட்

மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உறுதியாக மறுத்துவிட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படித்த மருத்துவர் மாணவர் நாவரசு, கடந்த 1996 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது அப்போது தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு. சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே. பொன்னுசாமியின் மகனான நாவரசுவை கொலை செய்ததாக அதே மருத்துவக் கல்லூரியின் மாணவரான ஜான்டேவிட் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட நீதிமன்றம் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து 1998-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து ஜான்டேவிட் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், கடலூர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. அதனையடுத்து சரணடைந்த ஜான்டேவிட் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜான்டேவிட் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் ஜான்டேவிட்டின் தாய் எஸ்தர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை மாநில அரசு நிராகரித்துவிட்டது. அதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது மகனை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று எஸ்தர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, ஜான்டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி எஸ்தர் தொடர்ந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in