திரும்பக் கிடைத்த நகைகள்: திருவொற்றியூர் குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி!

திரும்பக் கிடைத்த நகைகள்: திருவொற்றியூர் குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி!

சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் இருந்த கட்டிடம் இடிந்துவிழுந்த நிலையில், அவற்றின் இடிபாடுகளில் சிக்கிய நகை மற்றும் பணத்தை மீட்டெடுத்துக் கொடுத்து குடியிருப்புவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள் மீட்புக் குழுவினர்.

திருவொற்றியூர் கிராமத் தெருவில், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இடிந்துவிழும் அளவுக்கு மோசமாக இருந்தது தெரியவந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த நான்கு மாடி கட்டிடத்தில் வசித்துவந்தவர்கள் டிச.27 அன்று பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் அந்தக் கட்டிடம் இடிந்துவிழுந்தது.

உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும் பலரும் தங்கள் உடைமைகளைத் தங்கள் வீடுகளில் விட்டுவந்திருந்தது அவர்களைக் கவலையில் ஆழ்த்தியிருந்தது. குறிப்பாக, வீடுகளில் விட்டுவிட்டு வந்த நகைகள், இடிபாடுகளில் கிடைக்குமா என குடியிருப்புவாசிகள் தவித்துக்கொண்டிருந்தனர்.

கடந்த சில நாட்களாக இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்தன. அப்போது மற்ற கட்டிடங்களும் அதிர்ந்ததால் அந்தப் பணி நிறுத்திவைக்க்கப்பட்டது. பின்னர் அந்தப் பணிகள் இன்று மீண்டும் நடந்தன.

அப்போது இடிபாடுகளில் கிடைத்த நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சேகரித்து, உரியவர்களிடம் அவற்றை ஒப்படைத்தனர். திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் கோகிலா, நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிர்வாகப் பொறியாளர் நக்கீரன் உள்ளிட்டோர் குடியிருப்புவாசிகளிடம் ஒப்படைந்தனர்.

நகைகள், ரொக்கப் பணம் மீண்டும் கிடைத்ததில் குடியிருப்புவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் உழைப்பில், சிறுகச் சிறுகச் சேகரித்த நகைகளை மீட்டெடுத்துக்கொடுத்த தீயணைப்புத் துறையினருக்கும் காவலர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.