தடா ரஹீம் மீது காவல் ஆணையரிடம் ஜீவஜோதி புகார்!

தடா ரஹீம் மீது காவல் ஆணையரிடம் ஜீவஜோதி புகார்!

தனது கணவர் சாந்தகுமார் கொலை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய தடா ரஹீம் மற்றும் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ஒரு கும்பல் கடத்தி சென்று கொடைக்கானில் வைத்து கொலை செய்தது. தனது கணவர் கொலைக்கு சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்தான் காரணம் என ஜீவஜோதி பரபரப்பு புகார் அளித்தார். மேலும் இந்த கொலை வழக்கு கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என அனைத்து நீதிமன்றங்களும் உறுதி செய்து ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. தண்டனை காலத்திலேயே சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் சாந்தகுமார் வழக்கில் முக்கிய திருப்புமுனையாக இருந்த ஜீவஜோதி தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2001ஆம் ஆண்டு கூலிப்படையை ஏவி தனது கணவரை கொன்றதாக சரவணபவன் ராஜகோபால் மீது வழக்கு தொடர்ந்து, போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்தேன்.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி ஆதன் தமிழ் என்ற யூடியூப் சேனலில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா ரஹீம் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், ராஜகோபால் சிறையில் இருந்தபோது தடா ரஹீமிடம் சாந்தகுமார் கொலை வழக்கு குறித்து பல தகவல்கள் கூறியதாகவும், ராஜகோபாலுடன் ஜீவஜோதி மனைவிபோல் வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் அவரை ஏமாற்றிவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார் என உண்மைக்கு புறம்பான தகவல்களை தடா ரஹீம் பேசியுள்ளார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி தடா ரஹீம் தன்னை பற்றி ஆபாசமாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் பேசி வருவது கண்டிக்கதக்கது. உடனடியாக தடா ரஹீம் மற்றும் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஆதன் மீடியா யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என சைபர் க்ரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன்" என்று கூறினார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட பின்னர் தஞ்சாவூரை சேர்ந்த ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்பொழுது தஞ்சாவூரில் வசித்து வரும் ஜீவஜோதி தஞ்சாவூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in