`ஜெயலலிதாவுக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்தது, ஓய்வெடுக்க மறுத்தார்'

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்
`ஜெயலலிதாவுக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்தது, ஓய்வெடுக்க மறுத்தார்'

2016ல் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்னதாகவே தலைசுற்றல், மயக்கம் இருந்தது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான ஆணையம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் விசாரணையை தொடங்குகிறது. மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடர முடியாமல் போனது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 8 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு நியமிக்கப்பட்டது.

தொடர்ந்து 8 பேர் கொண்ட மருத்துவக் குழுவை மாற்றியமைத்து, மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட விசாரணை தொடர்பான ஆலோசனையில் சசிகலா தரப்பு மற்றும் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் ஆணையத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். அதன்படி அப்போலோ மருத்துவர்கள் 11 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த இன்று ஆஜராகுமாறு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். 2016ல் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்னதாகவே தலைசுற்றல், மயக்கம் இருந்தது என்றும் முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு பிறர் துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்தது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாகவும், தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என்றும் கூறினார்.

மேலும், சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்க ஜெயலலிதாவுக்கு பரிந்துரைத்தேன் என்றும் சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு சில உடற்பயிற்சிகளை செய்யுமாறும் பரிந்துரைத்தேன் என்றும் மருத்துவர் பாபு மனோகர் கூறியுள்ளார். ஓராண்டுக்கும் மேலாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் என 154 பேரிடம் விசாரணை நடத்தியது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in