
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சமையலராகப் பணிபுரிந்த ராஜம்மாள் நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.
ஜெயலலிதாவின் இல்லத்தில் சமையலராகப் பணியாற்றிய ராஜம்மாள், ஜெயலலிதாவிடம் மிகுந்த நன்மதிப்பை பெற்றவர். ராஜம்மாளை ஜெயலலிதா கடிந்து கொண்டதே இல்லை என்றுகூட சொல்வார்கள். ஜெயலலிதா எந்த நேரத்தில் என்ன சாப்பிடுவார் என்பது ராஜம்மாளுக்கு அவ்வளவு துல்லியமாகத் தெரியும். எந்த நேரத்தில் என்ன கேட்பார் என்பதைக்கூட அவர் நன்கு தெரிந்துவைத்திருந்தார். கேட்பதற்கு முன்பே இதோ என்று எடுத்துக்கொண்டு போய் கொடுப்பாராம். ஜெயலலிதாவின் பசியையும் ருசியையும் அவரளவுக்கு அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லை.
அப்படி இருந்தவர் ஜெயலலிதாவின் கடைசி சில வருடங்களில் அவருக்குப் பிடித்தபடி சமைத்து கொடுக்க முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டார் என்று பேச்சு இருந்தது. தாங்கள் சொல்வதை மட்டும்தான் அவருக்கு உணவாகக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார்கள். அதனால் ஜெயலலிதாவுக்குப் பிடித்ததைச் சமைத்து கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ராஜம்மாள் இருந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அவரும் போயஸ் தோட்டத்தைவிட்டு வெளியேறினார். ஆறுமுகசாமி ஆணையத்தில் அவரும் ஆஜராகி ஜெயலலிதா மரணம் குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வயதுமூப்பு காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜம்மாள் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் கேள்விப்பட்டதும் சசிகலா உடனடியாக சென்று ராஜம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதேபோல், ராஜம்மாள் மறைவுக்கு அதிமுக சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் உதவியாளராகவும் நம்பிக்கைக்குரிய தோழமையாகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் தோட்ட வேதா நிலையத்திலேயே தங்கி பணிவிடைபுரிந்த ராஜம்மாள் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்.
ராஜம்மாள் ஒரு தாயின் பரிவுடனும், பாசத்துடனும் தன்னை நேசித்து, போற்றி, பாதுகாப்பதாகப் பலமுறை ஜெயலலிதா நெகிழ்ந்து கூறியிருப்பதைக் கட்சியினரும், ஜெயலலிதாவை அறிந்தவர்களும் நினைவில் கொண்டிருக்கிறோம். கனிவும், பணிவும் கொண்ட ராஜம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பாசத்துக்குரிய ராஜம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல சசிகலாவும் ராஜம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘ராஜம்மாளின் மறைவு மிகவும் வேதனையையும், துயரத்தையும் எனக்கு அளித்துள்ளது. வேதா இல்லத்தில் எங்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்துள்ளார். ராஜம்மாள், ஜெயலலிதா மீதும் என் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ஜெயலலிதாவுக்கும் எனக்கும் எத்தனையோ சோதனை காலகட்டங்களில் உறுதுணையாக இருந்துள்ளார். ராஜம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுகவின் தலைவர்கள் மட்டுமல்லாது ஜெயலலிதாவின் அணுக்கத் தொண்டர்களும்கூட ராஜம்மாளின் மரணச் செய்தி கேட்டு துயரம் அடைந்துள்ளனர்.