
"தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் வசூலிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை" என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "மக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவையில்லை என மத்திய அரசே கூறியுள்ளது. சென்னை ஐஐடியில் கரோனா உறுதியான மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளது " என்று தெரிவித்தார்.