1750 வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஐ.டி பணிக்கான பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சார்பில் வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மென் பொருள் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேரும் வகையில் அவர்களைத் தகுதிப்படுத்தும் வகையில் 45 நாள்கள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இதில் என்ன வகையான பயிற்சிகள் வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் விரிவாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்களில் ஏராளமான பணி வாய்ப்புகள் காணப்படுகின்றன. பல பெருநிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை தங்கள் நிறுவனங்களுக்கு திறன் படைத்த தகுதியான பணியாளர்களைத் தேடி வருகின்றனர். இந்த இடைவெளிக்கு காரணம், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நவீன தொழில்நுட்பத்திறன் மற்றும் மென்திறன்கள் இளைஞர்களிடம் குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வேலையில்லா பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றோருக்கு தொழில்நுட்பத்திறன் மற்றும் மென்திறன்களை நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரம் உயர்த்திப் பயிற்சியளித்து தனியார் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் கூடிய பணியில் அமர்த்திட தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது. 

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் உள்ள ஐ.சி.டி அகாடமி  முதற்கட்டமாக, குமரி மாவட்டத்தில் 1750 பேருக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டம் வரும் அக்டோபர் 6 ம் தேதியன்று நாகர்கோவில் சுங்கான்கடை செயின்ட் சேவியர்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் துவங்க இருக்கிறது. இப்பயிற்சித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு, மார்கெட்டிங், நிதித்துறை, உற்பத்தி பிரிவு உட்பட்ட பலதர பணிகளுக்கும், அவரவர் கல்விப்பின்னணி மற்றும் துறை ஆர்வத்திற்கேற்ப 45 நாட்கள் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

இதில் தொழில்நுட்ப திறன் மற்றும் தனிநபர் மென்திறன்கள் மேம்பாட்டிற்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பின், அந்தந்த துறைசார்ந்த நிறுவனங்களில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வேலை கிடைப்பதற்கான முழு வழிகாட்டலும் வழங்கப்படும். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியில் சேர 2018-ம் ஆண்டு மற்றும் அதற்கு பின் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் அனைவரும் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுடையோர், அக்டோபர் 6-ம் தேதியன்று சுங்கான்கடை செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in