குற்றத்துக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை அவசியம் முதல்வர் அவர்களே!

குற்றத்துக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை அவசியம் முதல்வர் அவர்களே!

"பொய்யுரை, புகழுரை வேண்டாம்... இனி உள்ளது உள்ளபடி பேசி அனைத்து மக்களுக்குமான நல்லாட்சியை இனிதே கொடுப்போம்” என்று பிரகடனம் செய்துவிட்டு, முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு சாமானியனின் நேர்மறையான கடிதம்.

வணக்கம்.

ஒரு பரிவுள்ள அரசு 7 தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றுகிறது. அவையாவன... எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில் தருதல், துரிதமாகச் செயல்படுதல், திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு ஏற்றல் ஆகியன’ - தமிழக அரசின் இணையதளத்தில், முதல்வரின் தனிப்பிரிவின் முகப்பில் உள்ள நம்பிக்கை தரும் வாசகங்கள் இவை. மக்களின்பால் பரிவுள்ள ஒரு மக்கள்நல அரசு, இதைவிட நல்ல வார்த்தைகளில் தனது கொள்கைகளைக் கூறிவிடமுடியாது. வாழ்த்துகள் முதல்வரே!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலும், வாரந்தோறும் திங்கள்கிழமை காலையில் ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் நூற்றுக்கணக்கான மக்கள் கையில் மனுக்களோடும் கால் கடுக்க வரிசையில் காத்துக்கிடப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்களில், பல நிலைகளில் தங்களுக்கு நியாயம் கிடைக்காமல், உச்சபட்ச மேல்முறையீடாக ‘தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவிற்கு’ மனுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறதே, அப்படியென்றால் மாவட்ட மண்டல அளவில் அரசு ஊழியர்கள் பலர் தங்களது கடமையை நியாயமாக செய்யவில்லை என்பதுதானே உண்மை!

முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களுக்குத் தீர்வு கண்டபிறகு, இத்தகைய தாமதத்துக்குக் காரணமான, பொறுப்பற்ற, சட்டத்துக்குப் புறம்பான அரசு ஊழியர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படுகிறதா? அவர்களைத் திருந்தச் செய்வதற்கு என்ன செயல் திட்டம் தமிழக அரசிடம் இருக்கிறது?

நியாயம் கிடைக்காமல், அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை விவசாயியின் துயரக் கதை ஒன்றை மட்டும் இங்கு மாதிரிக்காகப் பார்ப்போம்:

மதுரை மாவட்டம், அயன் பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பா.கோபால்சாமி (பெயர் மாற்றப்படவில்லை) எதிர்கொண்ட பிரச்சினை இது. தன் குடும்பப் பூர்விகக் கூட்டுச் சொத்தை போலியான ஆவணங்கள் மூலம் தனிப் பட்டாவாக்கி வேறு ஒருவருக்கு விற்க, ஒரு சில மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர். இதை அறிந்துகொண்ட கோபால்சாமி, அவரது எல்லைக்குட்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் 12/03/2020 அன்று ஒரு புகார் மனு அளிக்கிறார்.

சம்பந்தப்பட்ட சொத்தில் இவ்வளவு மோசடிகள் இருக்கின்றன, அதனால் இதைப் புதிதாக யாருக்கும் கிரையமாகப் பதிவு செய்யக்கூடாது என்று ஆதாரங்களோடும், ஆவணங்களோடும் அப்பகுதி சார்பு பதிவாளரிடத்திலும் ‘தாவா’ மனு செய்து ஆட்சேபிக்கிறார் அவர். அந்த ஆட்சேப மனுவுக்கு ஒப்புதலும் அளிக்கின்றன மாவட்ட மற்றும் சார்பு பதிவாளர் அலுவலகங்கள். கோபால்சாமியின் இத்தனை முயற்சிகளையும் கடந்து, இப்புகாரை வலுவிழக்கச் செய்து எதிரிகளைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்த ஒரு சில காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் துணையோடு அந்த மோசடி பத்திரப்பதிவும், நில அபகரிப்பும் அதே சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இனிதே நடந்தேறுகிறது.

இப்படி ஒரு சில அரசு ஊழியர்கள் மற்றும் நில அபகரிப்பாளர்களின் கூட்டுச் சதியால் வஞ்சிக்கப்பட்ட கோபால்சாமி, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கிறார். பல துரோகங்களுக்கு மத்தியில், அரசுப் பணியையும் அதிகாரத்தையும் மக்களுக்கு நன்மை செய்யத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, தீங்கு செய்ய பயன்படுத்தக்கூடாது என்கிற அறநெறியோடு இருந்த அந்த இளம் கோட்டாட்சியர், கோபால்சாமியின் மனுமீது தீவிர விசாரணை நடத்துகிறார். போலியான ஆவணங்கள் தயார் செய்து சொத்து விற்கப்பட்டது உண்மை என்று அறிந்துகொண்ட அவர், சம்பந்தப்பட்ட பட்டாக்களை உடனடியாக ரத்து செய்ததுடன், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கிறார்.

கோட்டாட்சியரின் இந்த உத்தரவின் அடிப்படையில், மோசடிப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி 3.2.2021 அன்று மீண்டும் பேரையூர் காவல் நிலையத்தில் ஆரம்பித்து, தென் மண்டல காவல் துறை துணை தலைவர்வரை முறையிட்ட கோபால்சாமி, மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படுகிறார். தனக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கோரி காவல் துறையிடம் அவர் இறைஞ்சியதும் வீணாகிறது. தவறிழைத்த அரசு ஊழியர்களுக்கோ தடையில்லாத மாத சம்பளம் கவுரவத்தோடு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட தமிழகத்தின் முதல்வராக நீங்கள் பொறுப்பேற்றீர்கள். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புதிய நம்பிக்கையோடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு 06/07/2021 அன்று மின்னஞ்சல் வாயிலாகவும், 07/07/2021 அன்று பதிவுத் தபாலாகவும் புகாராக அனுப்பிவிட்டு, இனிமேலாவது விடிவு கிட்டும் என்று நம்பிய கோபால்சாமி, இப்போது மீண்டும் நியாயம் கிடைக்கக் காத்துக்கிடக்கிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அரசு ஊழியர்கள் என யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கோபால்சாமியைப் போல தமிழகமெங்கும் இப்படி பாதிக்கப்படும், அலைக்கழிக்கப்படும் ஆயிரமாயிரம் ஏழை, சாமானியர்களுக்கு என்ன தீர்வு என்கிற கேள்விக்கான விடையாக முதல்வரின் தனிப்பிரிவை நாம் பார்க்கிறோம். நீங்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு இந்தத் தனிப் பிரிவுக்கென்று பிரத்யேகமாக ஒரு ஐஏஎஸ்., அதிகாரியையும் நியமித்திருக்கிறீர்கள். சமீபத்தில் இந்தத் தனிப்பிரிவு அலுவலகத்துக்குத் திடீர் விஜயம் செய்தும் கவனம் ஈர்த்திருக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட வரவேற்கத்தக்க நேர்மறையான சூழலிலும் கோபால்சாமி போன்றோரின் போராட்டங்கள் முடிவுக்கு வராததால், நம்முள் பல கேள்விகள் எழுகின்றன. அப்படி கேள்விகளின் அடிப்படையில் பிறந்த நேர்மறையான கருத்துகளை முதல்வரின் தனிப்பிரிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் தருகின்ற பிரிவாக செயல்படுவதற்கான யோசனைகளாகவும், கேள்விகளாகவும் இங்கே முன் வைக்கின்றோம்.

* நீங்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, முதல் 100 நாட்களில், தனிப்பிரிவுக்கு வந்த, வருகின்ற புகார்கள் மற்றும் மனுக்கள், குறைந்தபட்சம் எவ்வளவு கால அவகாசத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன என்பது கண்காணிக்கப்படுகிறதா?

* தங்களது பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில், மாவட்ட அளவில், தங்களது நியாயமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் பாதிக்கப்பட்டவர்களே தங்களது கடைசி முயற்சியாக முதல்வரின் தனிப்பிரிவை நாடுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை மீண்டும் ஏற்கெனவே பணி செய்யாமல் தாமதித்த, நியாயம் வழங்காத அதே ஊரின், அதே அலுவலத்துக்கு, அதே அலுவலர்களிடமே போய் சேரச் செய்கின்ற நடைமுறைதான் இப்பொழுதும் இருக்கிறதா? இது எப்படி, சரியான முடிவாகயிருக்கும்? இந்த முறையில், இப்பொழுது மட்டும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் உண்மைகளை மட்டும் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கிவிடுவார்கள் என்று தமிழக அரசு எப்படி நம்புகிறது? பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு என்பது அவர்களுக்கான நியாயம் கிடைப்பதுதானே தவிர, பெயரளவில் சிக்கலை வெறுமனே முடித்துவைப்பதல்ல அல்லவா?

மாவட்ட அளவில் யாரேனும் ஒரு ஊழியர் பொறுப்பற்று சட்ட விரோதமாகச் செயல்படுவதால் பாதிக்கப்படும் ஒருவர், மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று சொன்னால், “யாரிடம் வேண்டுமென்றாலும் போய் சொல். கடைசியில் எங்களிடம்தானே அந்தப் புகார் மனு விசாரணைக்கு வரும்” என்று நேர்மையற்ற ஊழியர்கள் பலர் இன்றும் கொக்கரிப்பதை, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நேர்மையான ஊழியர்கள் இப்படிப் பேசுவதில்லை. அரசு ஊழியர்கள் பலர், பல நேரங்களில் தவறிழைப்பவர்களுக்கு சாதகமான போக்கையே கடைப்பிடிப்பதையும், ஆளுங்கட்சியின் கரை வேஷ்டியுடன், சட்டைப் பையில் முதல்வரின் படத்தோடும் காவல் நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், தவறிழைத்தவர்களின் பக்கம் நிற்பதையும் நீங்கள் அறிவீர்களா?

கள நிலவரம் இப்படித்தான் இருக்கிறது முதல்வர் அவர்களே!

“இனி என்னைப் புகழ்ந்து பேசினால் தண்டனை” என்று சட்டசபையிலேயே சொல்கிறீர்கள், இராமலிங்க வள்ளலாரின் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்கிற கருத்தை ஒட்டிய ஜீவகாருண்ய அரசாகத் உங்கள் அரசு செயல்படும் என்றும் சொல்கிறீர்கள். வள்ளலார் பிறந்ததினம் இனி, ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறீர்கள்.

உங்களது நோக்கம் முழுமையாகச் செயல்வடிவம் பெற ஒரு முக்கியமான நடவடிக்கையை நீங்கள் மேற்கொண்டாக வேண்டும். முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களை விசாரித்து, பாதிக்கப்பட்டிருக்கும் சாமானிய மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வது முதன்மையான பணி. அத்துடன், நேர்மையும், ஈரமும், கடமையுணர்ச்சியும் மிகுந்த அரசு ஊழியர்களைப் பொறுக்கியெடுத்து, அவர்களை வைத்தே சிறப்பு, தனி இலாகாக்களை உருவாக்கி, அப்படிப்பட்டவர்களைக் கொண்டு உங்களிடம் வரும் மனுக்களை விசாரித்து, கண்காணித்தால் மட்டுமே உங்களது புனிதமான நோக்கம் நிறைவேறும். தவறிழைத்த அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பினையும் அந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கலாம்.

உங்களது தேர்தல் முழக்கமான ‘முடியட்டும், விடியட்டும்’, என்பதன் பொருள்படி, பாதிக்கப்பட்டு நியாயம் கேட்டு வரும் சாமானியர்கள் இனி அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படுவது இத்தோடு முடியட்டும். ‘எல்லோருக்கும் எல்லாம்’, என்கிற உங்களது ஜீவகாருண்ய நோக்கம் தமிழக மக்களின் வாழ்வில் விடியட்டும். இனியாவது தமிழகம் வெல்லட்டும்.

இப்படிக்கு,

தமிழர் நலனில், தமிழக முதல்வர் நலனில் அக்கறை கொண்ட ஒரு சாமானியன்.

கட்டுரையாளர்: ஊடகவியலாளர் மற்றும் சமூகநீதி செயற்பாட்டாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in