ஏற்புடையதா ஆளுநரின் செயல்?

மநீம திருச்சி மாவட்டப் பொருளாளரின் ஆதங்கம்
ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபடும் ஆளுநர்
ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபடும் ஆளுநர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்களாக திருச்சியில் இருக்கிறார். அவர், திருச்சிக்கு வந்த 8-ம் தேதி மதியமே குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், அதிலிருந்த முப்படைகளின் ராணுவத் தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்ததும் அவருக்குத் தெரியவந்தது. ஆனால், ஆளுநர் இரங்கல் தெரிவித்துவிட்டு அமைதியாக திருச்சியிலேயே தங்கியிருந்தார்.

முதல்வர் நேரில் அஞ்சலி
முதல்வர் நேரில் அஞ்சலி

தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் உடனடியாக அங்கு விரைந்து சென்றதுடன், உரிய முறையில் அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் ராணுவம், உளவுத் துறை சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றியவரான ஆளுநர் தேசத்தின் ராணுவத் தளபதி இறந்தது குறித்து பொருட்படுத்தாமல் திருச்சியில் தங்கியிருக்கிறார். நேற்று இரவு நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மனைவியுடன் இன்று காலை ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போய் ரெங்கநாதரை தரிசித்து வந்திருக்கிறார்.

அடுத்தபடியாக, திட்டமிட்டிருந்தபடி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறார். நாகாலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரத்துக்காக தனது நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு டெல்லி பறந்த ஆளுநர், நாட்டின் உயரிய பொறுப்பு வகித்த பிபின் ராவத் உள்ளிட்டோர் உயிரிழந்த இடத்துக்குச் செல்லாதது, நேரில் அஞ்சலி செலுத்தாதது உள்ளிட்டவை பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

கிஷோர்குமார்
கிஷோர்குமார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் இதுகுறித்த தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். ’’தேசத்தை கட்டிக்காத்த ஒரு மாவீரர், அவருடைய மனைவி மற்றும் அவரைச் சார்ந்த ராணுவ வீரர்கள் தமிழகத்தில் எதிர்பாராமல் நடந்த கோர விபத்தில் உயிர்நீத்த நிலையில், இந்திய தேசமே கண் கலங்கி நிற்கிறது. ஆனால், இந்த சோக நிலையிலும் தமிழ்நாட்டின் முதல் குடிமகனாகிய ஆளுநர் உடனடியாக தனது அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றிருக்க வேண்டும் என்பது என்னைப் போன்ற சாமானிய குடிமகனின் எண்ணம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆளுநர்
ஸ்ரீரங்கம் கோயிலில் ஆளுநர்

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் துக்கம் நடந்ததுபோல துக்கத்தில் தவிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் இரக்க சிந்தனை உலகுக்கே தெரியும். அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்துகொண்டு உயிர்நீத்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் தனது கடமை முடிந்துவிட்டதுபோல ஆளுநர் வாளாவிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. திட்டமிட்ட எந்த நிகழ்வையும் ரத்து செய்யாமல் தான் பொறுப்பு வகிக்கும் மாநிலத்தில் எதுவுமே நடக்காதது போல் ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிகழ்வு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது என்பதெல்லாம் உண்மையிலேயே வேதனையளிக்கிறது.

ஏன், ஆளுநர்தான் அந்தப் பட்டத்தை அளிக்கவேண்டுமா,மற்ற அதிகாரிகள் கொடுத்தால் போதாதா. இதற்காக அவர் அஞ்சலி செலுத்தக்கூட போகாமல் இங்கே மனைவியுடன் தங்கியிருக்க வேண்டுமா? என்ற கேள்விகள் என்னைப்போன்ற சாதாரன குடிமக்களுக்கு எழுகின்றன. தேசத்தை காத்த மாவீரர்களுக்கு ஆளுநர் உரிய மரியாதையை செலுத்த வேண்டாமா.. அப்படி செய்யாத ஆளுநரின் செயலை ஏற்க மனம் ஒப்பவில்லை” என்கிறார்.

ராணுவ தளபதி படத்துக்கு அஞ்சலி செலுத்தும் ஆளுநர்
ராணுவ தளபதி படத்துக்கு அஞ்சலி செலுத்தும் ஆளுநர்

ஆளுநரின் இந்தச் செயல் ஏற்புடையதா என்று இவரைப் போன்றோரின் கேள்விக்கு பதில்தரும் விதத்தில், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்திலேயே முப்படைத் தளபதி பிபின் ராவத் படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஆளுநர். அது மட்டும் போதுமா ஆளுநர் சார்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in