அது என்னாங்க 40 பேர்? : மதுரை கலெக்டருக்கு மாற்றுத்திறனாளிகள் கேள்வி

அது என்னாங்க 40 பேர்? : மதுரை கலெக்டருக்கு மாற்றுத்திறனாளிகள் கேள்வி

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தைக் கண்டு களிக்க ஏன் 40 பேருக்கு மட்டும் அனுமதி என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைச் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதனைக் கண்டு களிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் திரள்வார்கள். இதில் மாற்றுத்திறனாளிகளும் சமவாய்ப்பு பெற்று சுவாமி தரிசனம் செய்ய மதுரை மாவட்ட நிர்வாகத்தால் 2018-ம் ஆண்டு முதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 40 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய், மாநகராட்சி, காவல்துறை இணைந்து செயல்பட வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைச் சங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன் அதென்ன 40 மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் கூறுகையில், "மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன்படி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பொதுநிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தங்கு தடையின்றி பங்கேற்கலாம். எனவே, 40 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணிக்கையை மதுரை ஆட்சியர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். விரும்புகிற, வாய்ப்பு கேட்கிற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கலாச்சார நிகழ்வில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in