மாணவர்களின் ஒழுக்கம் மட்டும்தான் பிரச்சினையா?- இதையும் யோசிக்கட்டும் பள்ளிக்கல்வித்துறை!

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக்கூட மாணவர்களின் ஒழுக்கக் கேட்டை முன்வைத்து சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிகளவில் வீடியோக்கள் உலாவருகிறது. அதிலும் முடிவெட்டிவராததால் ஆசிரியரை தாக்க பாயும் மாணவன் தொடங்கி, ரூட்டு தலயாக வழக்கமாகச் செல்லும் பேருந்துகளில் கெத்து காட்டுபவர்கள் வரை அவர்களை வகைப்படுத்தலாம்.

ஆனால் இங்கே மாணவனின் ஒழுக்கச் சிதைவிற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. சமூகம் அவர்களை அழுத்தும் சூழல் குறித்தும் பொதுவெளியில் விவாதிக்க வேண்டியது அவசியம் ஆகிறது!

கபிலன்
கபிலன்

இதுகுறித்து சமூக ஆர்வலர் பெ.கபிலன் காமதேனு இணையத்திடம் கூறுகையில், ``ஆசிரியர் அடிக்காத மாணவனை, சமூகம் அடிக்கும். ஆசிரியரின் கண்டிப்புக்கு ஆளாகாத மாணவன், சமூகத்தின் கண்டிப்புக்கு உள்ளாவான்’ என்றெல்லாம் இன்றும்கூட கிராமப் பகுதிகளில் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இப்போது பள்ளிகளில் பிரம்புக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே மன ரீதியாக நல்லதொரு அலைவரிசை ஏற்படவும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

ஆசிரியர் பள்ளிக்கு வரும் மனசூழலும், ஒரு மாணவன் பள்ளிக்கு வரும் மன சூழலும் ஒத்த மனநிலை கொண்டது இல்லை. அதிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பலரும் பொதுப்போக்குவரத்தை சார்ந்தே உள்ளனர். அரசு இலவச பேருந்து பயண அட்டையை அவர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் காலையில் பள்ளிக்கூட நேரத்தில் உரிய பேருந்து இல்லாததால் வாசல்படிகளில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் இன்று அதிகம். அண்மையில் தமிழக அரசு, படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்தால் ஓட்டுநர், நடத்துனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பியதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனாலும் போதிய பேருந்து இல்லாமல் தினம், தினம் படிக்கட்டின் வழியாகவே பள்ளியை அடையும் மாணவர்களே ஒவ்வொரு ஊரிலும் பல நூறுபேர்! இப்படி பள்ளிக்கு வரும் ஒரு மாணவனின் மனநிலையை, சொகுசாக வந்து சேர்ந்துவிடும் இன்னொரு மாணவனின் மனநிலையோடு ஒப்பீடு செய்துவிட முடியாதுதானே? அதேபோல் ஆசிரியர் தண்டித்தால்தான் மாணவனிடம் ஒழுக்கம்வரும்.

நாகர்கோவிலில் வாசலில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்
நாகர்கோவிலில் வாசலில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் படம் உதவி: கபிலன்

இன்னொன்று ஒவ்வொரு வகுப்பறையுமே பத்து, இருபது கிராமங்களின் தொகுப்பு. வெவ்வேறு ஊர்களில் இருந்து, ஒருவேளை ஒரே ஊரில் உள்ள வெவ்வேறு தெருக்களில் இருந்து சமூகத்தைக் காட்டும் கண்ணாடியாகவே மாணவர்கள் வருவார்கள். இவர்களின் அனைவரது இல்லச் சூழலும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. எப்படி அனைவரும் படிக்க வேண்டும் என அரசு, அரசு பள்ளிகளை, நூலகங்களை எழுப்பியிருக்கிறதோ அப்படித்தான் மதுகடைகளும் இயங்குகிறது. சதா சர்வநேரமும் குடித்துவிட்டு, தன் அம்மாவுடன் சண்டை செய்யும், பக்கத்து வீட்டில் பிரச்சினை செய்யும் அப்பாவைப் பார்த்து, அத்தகு குடும்ப சுழலில் இருந்து வரும் மாணவர்களும் இருப்பார்கள் தானே?

இன்று எத்தனை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாணவனின் குடும்பச்சூழலும் தெரியும் என்பதே பெரிய கேள்விக்குறி! 10, 11, 12 என வரிசையாய் பொதுத்தேர்வுகள். அதில் நல்ல மதிப்பெண்ணை மகன் பெற்றுவிட வேண்டும் என கடிவாளம் கட்டிய குதிரையைப் போல் அவர்களை இயக்கும் பெற்றோர்கள் ஒரு பக்கம். தங்கள் கனவுகளை எல்லாம் தங்கள் பிள்ளைகளின் மேல் தூக்கி சுமந்துகொண்டு துரத்திக் கொண்டிருக்கும் பெற்றோர் மறுபக்கம் என மாணவன் பதின் பருவத்தில் தன்னை தொலைத்து விடுகிறான்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மனம்விட்டு பேசிக்கொள்ளத்தான் ‘பெற்றோர் சந்திப்பு’ நிகழ்ச்சி உயிர்ப்புடன் இருக்கிறது. அரசுபள்ளிகளில், ‘பள்ளி மேலாண்மை குழு’ என்னும் பெயரில் மாணவர்களின் பெற்றோர்களோடு உரையாடும் களம் உள்ளது. ஆனால் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க மாணவர், பெற்றோர், ஆசிரியர் இடையே நல்லதொரு அலைவரிசை உருவாக வேண்டும். ஏனெனில், ‘ஆசிரியர் பள்ளியில் இருக்கும் பெற்றோர். பெற்றோரோ, வீட்டில் இருக்கும் ஆசிரியர்!’’ அந்த உறவுகள் மேம்படும்வகையில் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு இனி மாதம் தோறும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பில் முதல் மாணவனைத் தேர்ந்தெடுப்பது போல், தரவரிசைப் பட்டியல் ஒழுக்கத்தின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட வேண்டும்.

சிறந்த ஒழுக்கமான மாணவனுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழியே பரிசு கொடுப்பது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்கலாம். ஒழுக்கம், தனி மனித வாழ்வின் மதிப்பீடு! அதையே போட்டிக்கான மதிப்பீடாக்கினால் மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in