அதிகாரிகள் சொல்படி ஆட்சி நடத்துகிறாரா ஸ்டாலின்?

உடன்பிறப்புகளையும் புலம்பவைத்த சொத்து வரி உயர்வு!
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது எல்லா மட்டத்திலும் அதிருப்தி அலைகளை கிளறிவிட்டிருக்கிறது. ஐந்து மாநில தேர்தல்களுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்தது போல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து திமுக அரசும் சொத்து வரியை உயர்த்தியிருப்பதாக முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்ட போது அதை காட்டமாக விமர்சித்த மு.க. ஸ்டாலின், இன்று அப்படியே உல்டாவாகப் பேசுகிறார். இன்னொரு பக்கம், சொத்து வரி உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டுத்தான் முதல்வர் செயல்படுகிறார். ஆட்சியை அதிகாரிகளின் கையில் கொடுப்பது அவ்வளவு நல்லதல்ல... அது மக்கள் மத்தியில் ஆட்சிக்கு கெட்டபெயரைத்தான் உண்டாக்கும் என திமுக மேல்மட்ட தலைவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திமுக” என ஆரம்பம் முதலே அதிமுகவும் பாஜகவும் விமர்சித்து வருகின்றன. நீட் தேர்வு தொடங்கி, டீசல் விலை குறைப்பு, கியாஸுக்கு ரூ.100 மானியம், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்காதது என எதிர்க்கட்சிகள் எழுப்பி திணறடிக்கும் கேள்விகள் திமுக அரசுக்கு ஏற்கெனவே தலைவலியைத் தந்துகொண்டிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, இப்போது சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியை விதைத்திருக்கிறது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

மத்திய அரசுதான் காரணம்?

“மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளில் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-2022-ம் ஆண்டில் சொத்து வரி தள வீதங்களை (Floor Rates) அறிவிக்க வேண்டும் என்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. இதனடிப்படையிலேயே சொத்துவரி உயர்த்தப்படுகிறது” என்கிறார் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு.

இதுதொடர்பான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. நான்‌ அதை மனப்பூர்வமாக சொல்ல விரும்புகிறேன்‌. ஆனால்‌, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறுகிறபோது, அதைச்‌ சமாளிக்க வேண்டிய கட்டாயம்‌ இந்த அரசுக்கு ஏற்பட்டது.” என்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

கண்டிக்கும் அதிமுக

கடைசியாக 1998-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. சொத்து வரி உயர்வில் மத்திய அரசை கைகாட்டும் திமுக அரசின் அணுகுமுறையையும் எதிர்க்கட்சிகள் கண்டித்திருக்கின்றன.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், “கடந்த 2018-ம் ஆண்டில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக மக்களின் கருத்தை அறிய ஒரு சர்குலர்தான் வெளியிட்டோம். அந்த சர்குலர் வெளியிட்டதற்கே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தன. ‘சொத்து வரியா, சொத்தைப் பறிக்க வரியா?’ என்று இதே ஸ்டாலின்தான் கேட்டார். சர்குலருக்கு எதிர்ப்பு எழுந்தவுடனே சொத்து வரி உயர்த்தும் எண்ணத்தை அதிமுக அரசு கைவிட்டது.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

ஆனால், புறவாசல் வழியாக எல்லாவற்றையும் செய்யும் திமுக, இரவு 11 மணிக்கு சொத்து வரியை உயர்த்தி அரசாணை வெளியிடுகிறது. இதை மடைமாற்றம் செய்ய அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் திமுகவினர் நாடகம் போடுகிறார்கள். மத்திய அரசு நிபந்தனையால்தான் ஏற்றினோம் என்று அடுத்த நாடகம் வேறு. நீட் தேர்வுக்கு அதிமுக எதிர்ப்பாகத்தான் இருக்கிறது. மத்திய அரசு சொல்லித்தான் சொத்து வரியை உயர்த்தினீர்கள் அல்லவா? மத்திய அரசுதான் நீட் தேர்வை கொண்டு வரச் சொல்கிறது. அப்படியானால் நீட் தேர்வைக் கொண்டு வாருங்கள். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள். மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களையும் அனுமதியுங்கள். உங்களுக்கு தேவை என்றால் மத்திய அரசை துணைக்கு அழைப்பீர்கள். தேவையில்லை என்றால் மத்திய அரசை எதிர்ப்பீர்களா?” என்றார்.

அதிருப்தியில் திமுகவினர்

’கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது’ என்றும் திமுக தேர்தல் அறிக்கையிலேயே சொல்லி இருந்தது. இப்போது அதற்கு மாறாக, அவசர அவசரமாக சொத்து வரி உயர்த்தப்பட்டதில் தமிழக அரசு அதிகாரிகளின் கை இருப்பதாக திமுகவிலேயே பேச்சு எழுந்திருக்கிறது. சொத்து வரியை உயர்த்தியதில் அமைச்சர்களுக்கேகூட விருப்பமில்லை என்றும் எடப்பாடி ஆட்சியில் இருந்தது போல இப்போதும் அதிகாரிகளின் ஆட்சிதான் நடைபெறுவதாக திமுக மேல்மட்ட தலைவர்கள் மத்தியிலேயே சலசலப்புகள் எழுந்துள்ளன.

தனது ஆட்சியில் அதிகாரிகள் என்ன சொன்னாலும், அதையும் தாண்டி தன்னுடைய விருப்பப்படியும் அனுபவத்தையும் கொண்டுதான் கருணாநிதி முடிவெடுப்பார். ஆனால், இப்போது ஸ்டாலினை சுற்றியிருக்கும் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் கோட்டையில் தகவல்கள் உலா வருகின்றன. சொத்து வரி உயர்வு திடீரென உயர்த்தப்படவும் இதுதான் காரணம் என்றும் உடன்பிறப்புகள் மத்தியிலேயே அதிருப்தி ரேகை ஓடத் தொடங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக முக்கிய அமைச்சர் ஒருவரே தனக்கு வேண்டப்பட்ட பத்திரிகையாளர்களிடம் இப்படிப் புலம்பினாராம்: “தளபதிக்கு கள நிலவரமே தெரியவில்லை. அதிகாரிகளுடைய ஆட்சிதான் நடக்கிறது. அதிகாரிகள் தளபதியை தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள். இதனால், திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இதற்கான விலையை நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிச்சயம் கொடுக்க வேண்டி இருக்கும். இதையெல்லாம் தளபதிக்கு யார் புரியவைப்பது என்று தெரியவில்லை” என்பதுதான் அந்த அமைச்சர் வெளிப்படுத்திய அதிருப்தியின் சாராம்சம்.

அதிகாரிகள் கைங்கர்யம்

உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சீராக இயங்க வரி வருவாய் தேவை. ஆனால். அதை அவ்வப்போது மக்கள் பாதிக்கப்படாத வகையில் சிறிது சிறிதாக உயர்த்தும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அரசியல் காரணங்களுக்காக திமுக, அதிமுக ஆட்சிகள் அவ்வப்போது குறைந்தபட்ச வரி உயர்வை செய்யாமல் கிடப்பில்போட்டு வைக்கின்றன. திடீரென 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரி உயர்வை அறிவிக்கும்போது அது மக்கள் மத்தியில் அதிருப்தியாக வெளிப்படுகிறது. அதிகாரிகளைப் பொறுத்தவரை வருமானத்தைத் தான் பார்ப்பார்களே தவிர இதனால் ஆட்சிக்கு கெட்டபெயர் வருமே என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

பத்து ஆண்டுகள் திமுக எதிர்கட்சியாக இருந்தது. அதனால், ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீச முடிந்தது. சொத்து வரி உயர்வை அதிமுக வெளியிட்டதும் அதை எங்கள் தலைவர் எப்படி எதிர்த்தார் என்பது தெரியும். எதிர்கட்சியாக இருக்கும்போது வரம்பில்லாமல் பேசலாம். ஆனால், ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, கட்சி பேதங்களைத் தாண்டி அரசின் செயல்பாடுகளைத்தான் மக்கள் சீர்த்தூக்கிப் பார்த்து வாக்களிப்பார்கள். அதிகாரிகள் எதையாவது சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இது ஆட்சிக்குத்தான் கெட்டப் பெயரை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை தளபதி எப்படிச் செயல்படுத்தப்போகிறார் என்ற அச்சமும் உள்ளது. நிதி நெருக்கடியில் உள்ளபோது அதையெல்லாம் முழுமையாக செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இப்படியான சூழலில் மக்களுக்கு சுமையைக் கூட்டும் அறிவிப்புகளை வெளியிடும்போது தளபதி அவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்கிறார் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

திமுகவுக்கு பின்னடைவா?

சொத்து வரி உயர்வு திமுக அரசுக்கு பின்னடைவாக அமையுமா என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, “சொத்து வரி உயர்வுக்கான காரண காரியங்களை திமுக அரசு விளக்கியிருந்தாலும்கூட வரிச் சுமை வரும்போது மக்கள் மத்தியில் முணுமுணுப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுமே ஒழிய, திமுக அரசுக்கு பின்னடைவாக மாறாது. பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் கட்சிகள் ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்ற அரசியலைத்தான் செய்கிறார்கள்” என்றார் அவர்.

சொத்து வரியைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணம், மின் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றையும் உயர்த்தப்போகிறது திமுக அரசு என அலாராம் அடிக்கிறது அதிமுக. ஒருவேளை, அப்படி உயர்த்தி அதற்கு என்னதான் நியாயம் கற்பிக்க முயற்சித்தாலும் மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கை பொய்த்துவிடும் என்பதை ஆள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in