54 அரசு பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பிற்கு யார் காரணம்?

54 அரசு பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பிற்கு யார் காரணம்?

``தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லாததற்கு ஜெயலலிதா தான் காரணம்'' என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டு மொழிகள் வழியே பள்ளிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட அரசு பள்ளிகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில், தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் தான் தமிழ் பயிற்றுமொழியாக இல்லை என்ற தகவலும் வெளியானது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டதற்கு, ``தகவல் உரிமைச்சட்டத்தால் தான் இந்த விஷயம் வெளிப்பட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வந்தவர் ஜெயலலிதா'' என்று கூறினார். அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை தவறா ? என்று அவரிடம் கேட்டதற்கு, ``யார் எதைப் படிக்க விரும்புகிறார்கள் என்று அறியும் உரிமை அரசுக்குத்தான் உண்டு. ஆனால், பெற்றோர் ஆங்கில வழியைத்தான் விரும்புகிறார்கள் என்று அரசு நினைப்பதை ஏற்க முடியாது. பெற்றோர் விரும்புவதையெல்லாம் அரசால் செய்ய முடியுமா? ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு ஆசிரியர் வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இதை அரசு செய்யுமா? மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். அதை அரசு செய்யுமா?'' வினா எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில், ``உயர்கல்விக்குச் செல்லும் போது ஆங்கிலம் அறியாமல் இருப்பது மாணவர்களின் குற்றமா? அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சி வழங்கப்படுகிறதா? எனவே, அரசு பள்ளிகளில் ஆங்கில மொழிப்பயிற்சி ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகளில் இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை முதலில் அரசு செய்ய வேண்டும். தாய்மொழி மூலம் கல்வி கற்கின்ற மாணவர்கள், எந்த மொழியிலும் சிறப்பாக கற்க முடியும் என்ற நம்பிக்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிற்று மொழியாக தாய்மொழியைத்தான் கற்றுத் தரவேண்டும்’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in