நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் மன்றமும் இணைந்து செயல்பட வேண்டும்: தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

விழாவில்  உரையாற்றும் தலைமை நீதிபதி
விழாவில் உரையாற்றும் தலைமை நீதிபதி

வழக்குகளை துரிதமாக முடிக்க நீதிமன்றமும், வழக்கறிஞர் மன்றமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் திறப்பு விழாவிற்காக இன்று ஊட்டிக்கு வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகையில், ``சாமானிய மனிதனின் நீதிக்கான கடைசி ஆதாரம் நீதித்துறை ஆகும். நீதியை தாமதப்படுத்துவது நீதியை மறுப்பதற்கு சமம். ஆனால் நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில் வழக்கு எப்போது முடியும் என்பது தெரிவதில்லை.

நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக நீதிபதிகளின் வேலைப் பளு அதிகரிக்கிறது. இதனால் வழக்குகளின் விசாரணை தாமதம் ஆகிறது. இதனால் போதுமான நீதிபதிகள் நியமனம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் அவசியமாகிறது. தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு செய்திருக்கிறது. பெரும்பாலான நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் 92 சிவில் வழக்குகள் மற்றும் 33 கிரிமினல் வழக்குகள் 20 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. இதே போல மூன்று வழக்குகள் 25 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. இந்த தாமதத்தை நியாயப்படுத்தக் கூடாது. நிலுவை வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டு காலத்திற்கு மேலாக எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்ற நிலையை எட்ட வேண்டும். இதற்கு வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் மன்றம் இணைந்து செயல்பட வேண்டும். அதன் மூலம் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த முடியும். இளம் வழக்கறிஞர்கள் தங்கள் பணி முடிந்ததும் வீட்டுக்கு அலுவலகத்துக்கு சென்று விடுகின்றனர். அப்படி இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுவது, அதற்கு நீதிபதிகளின் எதிர்வினை, வழக்கில் நீதிபதிகளின் மனநிலை ஆகியவற்றை கூர்ந்து கவனித்தால் எதிர்காலத்தில் தங்கள் வழக்கு விசாரணைக்கு அது பெரும் உதவியாக இருக்கும்" என்று பேசினார்.

நீதிமன்ற கட்டிடம் திறப்பு
நீதிமன்ற கட்டிடம் திறப்பு

இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், சேஷசாயி, ஆனந்தி, பவானி சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸிஷ் ராவத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in