அந்தரங்க உடல் நலம் குறித்து தகவல்: மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

அந்தரங்க உடல் நலம் குறித்து தகவல்: மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் அந்தரங்க உடல் நலம் குறித்த தகவல்களை பெற்று பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் கற்றல் பணியினை தாண்டி பல்வேறு நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் மாணவர்களின் கற்றல் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாணவ- மாணவியர்களிடம் அந்தரங்க உடல் நலம் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து EMIS எனப்படும் பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற உத்தரவால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் மாணவர்களின் உடல் நலன் மற்றும் இடைநிற்றல் ஏற்படுவதற்கான காரணங்களை அறியும் பொருட்டு பல்வேறு தகவல்களை திரட்ட உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா? மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்கின்றதா? என்ற தகவல்களும், மாணவர்கள் பான் ஜர்தா போடும் பழக்கம் உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை தினந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கேட்டு விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அரசுப்பணிகளுடன், மாணவர்களின் விவரங்களை சேகரிப்பது வருகை பதிவேடு பதிவேற்றம், தேர்வு வினாத்தாள்களை சமர்ப்பித்தல், பள்ளி மேஜை நாற்காலி உள்ளிட்ட விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் உடல் நலன் சார்ந்த அந்தரங்க கேள்விகளையும் கேட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவ, மாணவிகளிடம் கால்கள் பாதங்கள் வளைந்து காணப்படுகிறதா? என்பது போன்ற தனிப்பட்ட தகவல்கள் திரட்டுவதால், அவர்களிடம் உள்ள குறைபாடுகள் மற்றவர்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சமும், தனிமைப்படுத்தப்படுவோமோ என்ற மன அழுத்தமும் மாணவர்கள் எதிர்கொள்ள இயலும். எனவே இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஆசிரியர்கள், மாணவர்கள், கேட்டு கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இது போன்ற எழுத்துபூர்வமான எந்த உத்தரவுகளையும் பள்ளிக்கல்வி துறை பிறப்பிக்காத நிலையில் பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் EMIS இணையதளத்தில் மாணவர்களிடம் இது போன்ற தகவல்களை பெற்று பதிவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in