சாவித்ரிபாய் புலே வாழ்க்கையை பாடத் திட்டத்தில் சேர்த்திடுக!

சாவித்ரிபாய் புலே
சாவித்ரிபாய் புலே

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்திலேயே மிகவும் துணிச்சலாகப் பெண் உரிமைக்காகப் போராடியவர் சாவித்திரிபாய் புலே. அவரது உழைப்பும் சேவையும் காலத்தால் மறக்கடிக்கப்பட்டு இருப்பது வரலாற்று பிழை என்று ஆதங்கப்படுகிறார் அறிவியல் இயக்க செயற்பாட்டாளரும், ஆசிரியருமான ஜே.ஆ.டோமினிக் ராஜ். சாவித்ரிபாய் புலேவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க, தொடர்ந்து பொதுவெளியில் அவர் குறித்த பரப்புரையிலும் இருக்கிறார்.

டோமினிக் ராஜ்
டோமினிக் ராஜ்

இதுகுறித்து ஆசிரியர் டோமினிக் ராஜ் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, ‘1831-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் நைகோன் என்னும் கிராமத்தில் கான்டோஜி நைவஸ் பட்டேல், லட்சுமிபாய் இணையருக்கு மகளாகப் பிறந்தவர் சாவித்ரிபாய் புலே. அந்தக் காலகட்டத்தில் பெண்கள் அதுவும் குறிப்பாக பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் படிப்பதில்லை. சமூகமும் அவர்களைப் படிக்க அனுமதிப்பதில்லை. சாவித்திரியின் பெற்றோர்களும் அப்போதைய வழக்கப்படி அவருக்கு 9 வயதாகும் போதே 12 வயது நிரம்பிய ஜோதிராவ் புலே என்னும் சிறுவனுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

திருமணத்துக்குப் பின் தன் மனைவியின் கல்வி ஆர்வத்தைப் புரிந்துகொண்ட ஜோதிராவ், தனது வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் சாவித்திரிபாய் எழுதப் படிக்கவும் சரளமாக போதிக்கவும் கல்வி கற்றுக் கொடுத்தார். அதன்பின் பள்ளியில் சேர்த்து 4-ம் வகுப்புவரை படித்து கல்வி போதிக்கும் பயிற்சியும் பெற வைத்தார்.

சமூக மாற்றம் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்த தம்பதியர், இந்திய வரலாற்றிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை புனேவில் உள்ள 'பீடேவாடா' என்ற இடத்தில் 9 பெண் குழந்தைகளுடன் தொடங்கினர். இப்பள்ளியில் பாடத்திட்டத்தையும் மாற்றி வடிவமைத்து வாழ்வியலுக்கு தேவையான கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத் தந்து, மாற்றுக் கல்விக்கான விதையை ஊன்றினர். இந்தியாவில் முதல் பெண் ஆசிரியராக அப்பள்ளியில் பணியாற்றினார் சாவித்திரி பாய்.

சாவித்ரிபாய் புலே தன் கணவருடன்
சாவித்ரிபாய் புலே தன் கணவருடன்

பள்ளி செல்லும்போது அவர் மீது கற்கள், சாணம், மனித மலம் ஆகியவற்றை வீசிய சம்பவங்களும் நிகழ்ந்தன. மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். சாவித்திரிபாய் புலே இதற்கெல்லாம் கவலைப்படாமல் இதை துணிவுடன் எதிர்கொண்டார்.

தன் கணவனிடம் தன் மீது மலம் வீசியது பற்றிச் சொன்னார். அதற்கு ஜோதிராவ், "கல்வி ஒன்றுதான் மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தது. கல்வி ஒன்றின் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தைச் செய்ய முடியும். இந்தச் சமூகத்தில் நாம் இருவரும் இவர்களை எதிர்க்க முடியாது. எனவே, நீ பள்ளி செல்லும்போது பையில் வேறொரு புடவை எடுத்துச்சென்று அங்கு குளித்து உடை மாற்றிக்கொள்" என்று கூறினார். இப்படிப் பல்வேறு சித்திரவதைகளுக்கு கலங்காமல், பெண் கல்வியை முனைப்பாக கொண்டுசென்ற முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் புலே. இவரும், இவரது கணவர் ஜோதிராவ் புலேயும் சேர்ந்து மகாராஷ்டிரத்தில் மொத்தம் 18 இடங்களில் அனைத்து ஜாதியைச் சார்ந்த இளம்வயது விதவைகள், பாலியல் வல்லுறவு மூலம் பிறந்த குழந்தைகள் என ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினருக்கும் கல்வி கொடுக்க கல்வி நிலையங்களைத் தொடங்கினர். இதில் 150 பெண்களும் 100 ஆண்களும் படித்தனர்.

சாவித்திரிபாய் சமூகப் போராளி மட்டுமல்ல, நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப் போக்கு இவரில் இருந்தே தொடங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன. இவரது கவிதைத் தொகுப்புகள் 'காவிய மலர்கள்' என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசின் அங்கீகாரத்துடன் வெளியானது.

சமூக விடுதலையைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காலகட்டத்தில் பெண், கல்வி, விதவை மறுமணம், புரோகிதர் இல்லா திருமணம், தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை என தன் மொத்த வாழ்வையும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி இந்த சமூகத்துக்காகவே செலவிட்ட இவர்தான் சிறந்த ஆசிரியர் என்று போற்றப்பட்டிருக்க வேண்டும். கடும் பஞ்சம் நிலவிய காலத்தில் ஏராளமான குழந்தைகள் அநாதைகளாக மாறி நின்றபோது, அவர்களுக்காகவே 52 உறைவிடப் பள்ளிகளை ஏற்படுத்தியதுடன் 90 இலவச உணவு விடுதிகளையும் நடத்தி மக்களுக்கு உணவளித்தனர். இரட்டைக்குவளை முறை மிகவும் தீவிரமாக அமலில் இருந்த காலகட்டத்தில், இருவரும் தங்கள் வீட்டிலேயே கிணறு வெட்டி தாழ்த்தப்பட்டவர்கள் குடிநீர் எடுத்துக்கொள்ள வழி செய்து கொடுத்தனர். பிளேக் நோய் பாதிப்புக்குள்ளான காலத்தில், தானே பலரைத் தூக்கிக்கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தார். தனது 66 வயதிலும் மனிதம் காக்கப் போராடியவர், 6 வயது சிறுவனை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும்போது தானும் அந்த நோயின் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

தன் கணவருக்கு இறுதியாக அவர் எழுதிய கடித வரிகளில் கூட.. "காலம் எவ்வளவு பெரிய இடரை ஏற்படுத்தினாலும் நமது செயல்பாடுகள் தடைபடக் கூடாது" என எழுதியிருந்தார். மகாராஷ்டிரா அரசு அவர் பெயரில் பல்கலைக்கழகம் வைத்திருக்கிறது. அவர் பிறந்தநாளை மகளிர் தினமாகக் கொண்டாடுகிறது. இந்திய அரசும், அவருக்கு 1998-ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்த தேசத்திலும் இந்தத் தலைமுறையினருக்கு அவரின் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.

மாற்றத்துக்கான கல்வியை விதைத்த முதல் பெண் ஆசிரியர் பிறந்தநாளை, ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் தன் வாழ்நாள் முழுதுமே சமூக நீதிக்காக வாழ்ந்த சாவித்திரிபாய் புலேயின் வரலாறு, அனைத்து மாநில பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in