`ஒருங்கிணைந்த வளர்ச்சியே தற்போது இந்தியாவிற்கு தேவை'- ஆளுநர் ரவி

`ஒருங்கிணைந்த வளர்ச்சியே தற்போது இந்தியாவிற்கு தேவை'- ஆளுநர் ரவி

"ஒருங்கிணைந்த வளர்ச்சியே தற்போதைய இந்தியாவிற்கு தேவை. 2047-ல் தொழில்நுட்பம், அறிவியல், பாதுகாப்பில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக திகழும்" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய ஆளுநர், "உலகின் வளர்ந்த பல நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவற்றை குறைப்பதற்கு எவ்வித முன்னெடுப்புகளும் எடுக்காத நிலையில் இந்தியா 2017-ம் ஆண்டு கரியமில வாயு இல்லாத நாடாக மாறுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டது. இது மிக தைரியமான நடவடிக்கை. இந்தியாவிற்கு உள்ள எதிர்கால கனவு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறுவது காலத்தின் கட்டாயம். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தாலும், மாநிலங்களுக்கிடையே சில துறை வளர்ச்சியில் சமமற்ற போக்கு காணப்படுகிறது.

பன்முகத்தன்மை கொண்ட நாடுதான் இந்தியா. பல பகுதிகள் மேம்பட்டுள்ளன, பல பகுதிகள் மேம்படவில்லை. வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என பல வித்தியாசங்கள் உள்ளன. சுகாதாரம், உறைவிடம், உணவு ஆகியவற்றில் மாநிலங்களுக்கு இடையே வித்தியாசம் இல்லாமல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் 25 ஆண்டுகளில் (2047) தொழில்நுட்பம் அறிவியல், பாதுகாப்பில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சிறந்து விளங்கும், மாநிலங்களுக்கிடையே ஒருங்கிணைந்த வளர்ச்சியே இன்று இந்தியாவின் தேவை" என்றார்.

விழாவில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார், தேசிய வேளாண் அறிவியல் கழகச் செயலர் பி.கே.ஜோஷி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். விழாவில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் 26 விருதுகளை பெற்ற திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ரமேஷ் உள்ளிட்ட பலருக்கு விருதுகளையும் பட்டங்களையும் ஆளுநர் வழங்கினார்.

Related Stories

No stories found.