ஹெராயின் கூடாரமாகிறதா குஜராத்?

ஹெராயின் கூடாரமாகிறதா குஜராத்?

கடல்வழியில் கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், குஜராத் வாயிலாக இந்திய சந்தையை எட்டும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தயாராகும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான ஹெராயின், பெருமளவு குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது. செப்டம்பர் மாதம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 3 டன் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. கன்டெய்னரில் வைத்து கப்பல் வழியே கடத்தப்பட்டது அம்பலமானதும், அதற்கு முன்னதாக குஜராத்துக்குள் நுழைந்த கன்டெய்னர்கள் கேள்விக்கு ஆளாயின. இந்த முந்த்ரா சம்பவத்துக்குப் பின்னர் டன் கணக்கில் ஹெராயின் கடத்தப்படுவது நின்றுள்ளது.

ஆனால், கடல்வழியே நாட்டுப் படகுகளில், 100 கிலோவுக்கும் குறைவான ஹெராயினை கடத்துவது அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் ஹெராயின், பாகிஸ்தான் வழியே குஜராத் கடல்வெளியை எட்டுகிறது. ஆழ்கடலுக்கு விரையும் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தங்கள் படகுகளில் போதைப்பொருளை கைமாற்றித் திரும்புகிறார்கள். இவை அனைத்தும், குஜராத்தில் மும்முரமாக செயல்படும் தீவிரவாத எதிர்ப்புப் படையினரின் சோதனையில் மட்டுமே சிக்கி வருகின்றன.

இந்த வருடத்தில், இதுவரை மட்டும் தீவிரவாத எதிர்ப்பு படையினரின் சோதனையில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஹெராயின் சில்லறை கடத்தல்களில் சிக்கியுள்ளது. கடந்த ஞாயிறு நள்ளிரவு, ரூ.600 கோடி மதிப்பிலான 120 கிகி ஹெராயின் கடத்திய கும்பலை தீவிரவாத எதிர்ப்பு படை வளைத்தபோது, கடத்தல்காரர்களின் பின்னணியில் திட்டமிட்ட வலைப்பின்னல் செயல்பட்டு வருவது தெரியவந்தது. இந்தியச் சந்தைக்கு அப்பால், ஆப்பிரிக்க நாடுகளுக்கான கடத்தல் தடமாகவும் குஜராத் விளங்குவது புலப்பட்டது. ஆப்கன் - பாகிஸ்தான் - ஆப்பிரிக்க கடத்தல் தடத்தில் குஜராத் முக்கிய கேந்திரமாக, ஹெராயின் பதுக்கலுக்கான கூடாரமாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.

ஹெராயின் கடத்தியதாக கைதான குஜராத்தியர்
ஹெராயின் கடத்தியதாக கைதான குஜராத்தியர்

தீவிரவாத நிதி ஆதாரத்தை தடுப்பதற்காக, கிரிப்டோ கரன்சிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதுவரை தீவிரமாகப் பரிசீலிக்கும் மத்திய அரசு, நாட்டில் ஊடுருவும் போதைப்பொருள் வலைப்பின்னலை முடக்குவதில் வாளாவிருக்கிறது. தீவிரவாத எதிர்ப்புப் படை போல பிரத்யேகமாக, போதைப்பொருள் கடத்தல் கண்காணிப்பு மற்றும் தடுப்புக்கான சிறப்புப் படையணியும் அதற்கு ஆதாரமான நுண்ணறிவுப் பிரிவும், குஜராத் மாநிலத்தில் நடைமுறைக்கு வருவது அவசியமாகிறது. முன்னோடி மாநிலமாக சித்தரிக்கப்படும் குஜராத் அந்தப் பெயரை காப்பாற்றிக்கொள்ளவும், இதர மாநிலங்கள் இந்த போதைப்பொருளின் சந்தையாக மாறும் அபாயத்தைத் தடுக்கவும் இவை அவசியமாகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in