பரப்புரை நேரம் அதிகரிப்பு; வேட்பாளர்கள் மும்முரம்

தேர்தல் ஆணையத்தின் ஜில்லுனு ஒரு அறிவிப்பு
பரப்புரை நேரம் அதிகரிப்பு; வேட்பாளர்கள் மும்முரம்
மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காலை 6 முதல் இரவு 10 மணி வரை, பரப்புரை மேற்கொள்ளலாம் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான கட்சிகளின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில், இரவு 8 முதல் காலை 8 மணிவரை பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பரப்புரை மேற்கொள்வதற்கு கூடுதல் நேரம் அளிக்கப்படுவதாகவும், காலை 6 முதல் இரவு 10 மணிவரை பரப்புரை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு வாக்கையும் நின்று நிதானமாகப் பேசி பெறுவதற்கு இந்த நேரம் போதலையே என்று வருந்திய வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஜில்லுனு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.

தேர்தல் பரப்புரையின்போது நடைபெறும் சாலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள், சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு உரிய அலுவலரிடம் அனுமதிபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தேர்தல் ஆணையம், கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலைப் பெறுவது அவசியம் எனவும் அறிவித்துள்ளது.

மேலும், பரப்புரையின் போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களும் அவர்களது பிரதிநிதிகளும் செய்ய வேண்டியவற்றை இந்தக் கூடுதல் நேரத்தை முறையாகப் பயன்படுத்தி, வெற்றிப்பாதையை நோக்கிப் பயணப்பட மகிழ்வுடன் மும்முரமாகி விட்டிருக்கிறார்கள். இருந்தாலும் இந்தக் கூடுதல் நேரம் என்பது தலைமையிலிருந்து பிரச்சாரத்துக்கு வருவோருக்குதான் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் ஒரு கருத்து எழுந்துள்ளது.

Related Stories

No stories found.