தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்

“தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் தொடர்ச்சியான முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ''சென்னையைப் பொறுத்தவரை 26 ஆயிரம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 987 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களைக் கண்காணிக்க வட்டத்துக்கு 5 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றிக் கொண்டுள்ளனர். மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 180 பேர், தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்

இதுதவிர கிளஸ்டர் பகுதிகளில் வீட்டின் அருகிலேயே மருத்துவ முகாம்கள் அமைக்க, 200 மருத்துவக் குழுக்கள் சென்னை மாநகரில் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் 22 இடங்களில் ஸ்கிரீனிங் மையங்களும், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 904 படுக்கையோடு கூடிய கரோனா பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்றுமுதல் தொற்று பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கிங்ஸ் மருத்துவமனையில் தலா 250 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சையோ, ஆக்சிஜன் தேவையோ ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர்.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், காலை, மாலை வேளைகளில் பல்ஸ் ஆக்ஸ்மீட்டரில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 92 என்ற புள்ளிக்குகீழ் ஆக்சிஜன் அளவு வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை. தொற்று உறுதிசெய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகிறது. மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கு டெல்டா உறுதியாகிறது. அதனால் மரபணு பரிசோதனை கைவிடப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in