இலங்கையைப்போல இந்தியாவிலும் நெருக்கடி நிலை வரும்!

எச்சரிக்கும் சிஐடியு மாநிலத் தலைவர்
இலங்கையைப்போல இந்தியாவிலும்
நெருக்கடி நிலை வரும்!

"மோடி அரசு பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கைகளால், இலங்கையில் ஏற்பட்டது போன்று இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்" என்று இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநிலத்தலைவர் அ.சவுந்திரராசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் குறித்து சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்திரராசனிடம் பேசினோம்.

அ.சவுந்திரராசன்
அ.சவுந்திரராசன்

அகில இந்திய வேலைநிறுத்தத்தில் எவ்வளவு பேர் பங்கேற்றுள்ளனர்?

இந்தியா முழுவதும் இன்றையப் போராட்டத்தில் 20 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் எல்ஐசி, வங்கி, தபால் மற்றும் மத்திய - மாநில அரசுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதேபோல தலைமையின் அறிவிப்பையும் மீறி தமிழகப் போக்குவரத்துத் துறையில் 90 சதவீத தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த இரண்டு நாள் போராட்டம் எதற்காக நடைபெறுகிறது?

விலைவாசி உயர்வு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாகப் பாதிக்கிறது. அதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. இதனால் ஆட்டோமொபைல்ஸ் துவங்கி சாலையோர செருப்புக்கடை வரை அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதுகாக்கப்பட்ட துறையில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முறைசாராத் தொழிலாளர்களுக்குப் பணிக்காப்பு, ஓய்வூதியம், மருத்துவ வசதி செய்து தர வலியுறுத்துகிறோம். ஆனால், மத்திய அரசு செய்து தரவில்லை. மேலும், மத்திய அரசுக்கு மூலதனத்தை ஈட்டித்தரும் எல்ஐசி, வங்கி ஆகியவற்றை தனியார் முதலாளிகளுக்கு விற்க மத்திய அரசு முயற்சி செய்வது தேசவிரோதம். அரசு சொத்துகளான பாதுகாப்புத்துறை, விமானம், ரயில்வே உள்ளிட்ட அனைத்துத்துறைகளையும் தனியாருக்கு ஏலத்திற்கும், குத்தகைக்கும் விடும் ஆபத்தான நிலையில் நாடு உள்ளது. மோசமான வேளாண் சட்டத்தைப்போல தொழிலாளர் நலச்சட்டத்திருத்தங்களால், வேலையில் இருந்து 80 சதவீத தொழிலாளர்களை வெளியேற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக, தொழிலாளர்களைச் சட்டப்பாதுகாப்பு இல்லாதவர்களாக மாற்ற மோடி அரசு முயற்சி செய்கிறது.

எனவே, இலங்கையைப்போல பொருளாதார நெருக்கடியில் இந்தியாவையும் தள்ள பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். பெட்ரோல், டீசல் விலையை 7 நாளில் 6 முறை உயர்த்தினால் மக்களிடம் பணம் எங்கே இருக்கும்? ஏற்கெனவே ஏழையாக இருக்கும் மக்களை மேலும் ஏழையாக்கும் நடவடிக்கையில்தான் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எனவே, மக்களுக்கான ஆட்சியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு சவுந்திரராஜன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.