`முதல்வர் தொகுதியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தவும்'

`முதல்வர் தொகுதியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தவும்'

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் தமிழகத்தில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடை செய்யப்படுவதாகவும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவர அனுமதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டபட்டது.

அப்போது நீதிபதிகள் பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர். தடையை அமல்படுத்துவதில் அக்கறையில்லை என்றால் தமிழகத்தில் உற்பத்தியை மட்டும் ஏன் தடுக்க வேண்டுமென கேள்வி எழுப்பியதுடன், பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பதா அல்லது ஊக்குவிப்பதா என அரசு உரிய முடிவெடுக்கவும் அறிவுறுத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படுவதாகவும், ஆனால் மாற்று பொருட்களால் ஆன பைகளுக்கு அதன் மதிப்பைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தி வருவதாகவும், டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மஞ்சப்பை திட்டம் பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழக அரசின் திடீர் ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மட்டுமல்லாமல் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளபோது, தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதும் சாத்தியம் என தெரிவித்ததுடன் நீதிபதிகள், குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதில் பிளாஸ்டிக் தடை பொருட்கள் மீதான உத்தரவை அமல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.

அதன்படி முதல்படியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மூன்று வாரங்கள் கழித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in