மின்வெட்டு இன்னும் அதிகரிக்கலாம் - மேட்டூரில் அடுத்த சிக்கல்!

மின்வெட்டு இன்னும் அதிகரிக்கலாம் - மேட்டூரில்  அடுத்த சிக்கல்!
மேட்டூர் அனல் மின் நிலையம்

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள நான்கு அலகுகளில் மூன்றில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் நான்கு அலகுகள் உள்ளன. அவற்றில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தம் நாள் ஒன்றுக்‍கு மொத்தம் 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக தினமும் 22 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது.

இதற்குத் தேவையான நிலக்கரி சென்னை துறைமுகத்தில் இருந்து ரயில் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலையில் தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு போதுமான அளவு இல்லை. அதனால் 840 மெகாவாட் கொண்ட அனல்மின் நிலையத்தில் 2, 3 மற்றும் 4-வது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த அலகுகளின் மூலம் கிடைக்கும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் அலகில் இருந்து 160 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பல இடங்களிலும் மின்வெட்டு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தற்போது மேட்டூரில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் தடை நேரம் அதிகரிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.