11 பேர் குடும்பத்துக்கு உடனடி நிவாரணம்: தஞ்சாவூர் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்

11 பேர் குடும்பத்துக்கு உடனடி நிவாரணம்: தஞ்சாவூர் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜையை முன்னிட்டு நேற்றிரவு தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அப்போது பொது மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேடு கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் தஞ்சை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். அத்துடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிக்கவும் உள்ளார்.

இதனிடையே தஞ்சை தேர் திருவிழாவில் நடந்த துயரமான செய்தியை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்ததாகவும் இறந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அத்துடன் தேர் திருவிழா விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்த மருத்துவமனையில் உள்ள 15 பேருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து நடந்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.