எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயு...பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு!

தனியார் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்
தனியார் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்
Updated on
1 min read

சென்னை எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து  கசிந்த அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  சுற்றுச்சூழல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொழிற்சாலை
தனியார் தொழிற்சாலை

சென்னை எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல்  தனியார் உரத் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி நள்ளிரவு  தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமங்களில் அமோனியா வாயு பரவி அதை சுவாசித்த  மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.

விஷ வாயு பரவுகிறது என்ற வதந்தியால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதிகளில் வசித்த மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறி பிற பகுதிகளுக்குச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

அமோனியா வாயுவை சுவாசித்ததால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.  அரசு அதிகாரிகளும்,  அமைச்சர்களும் இந்த பகுதி மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.  மேலும் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்து இது குறித்த ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.

அந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்திருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும். இன்னும் ஒரு சில தினங்களில் இழப்பீட்டுத் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in