செல்லூரார் செம பிரகடனம்... லண்டனில் பென்னி குயிக் கல்லறையை நானே சீரமைப்பேன்!

பென்னி குயிக் கல்லறை முன்பு செல்லூர் ராஜு
பென்னி குயிக் கல்லறை முன்பு செல்லூர் ராஜு

முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக் கல்லறை லண்டனில் உள்ளது. அங்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 'பென்னி குயிக் கல்லறையை சீரமைத்து கொடுப்பதாக திமுக அரசு உறுதிமொழி அளித்தும் நிதி ஒதுக்கவில்லை. இதனால் நானே முன்னின்று வேலைகளை நடத்தி முடிக்க முயற்சி செய்வேன்' எனக் கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னி குயிக். ஆங்கிலேய பொறியாளரான இவர், லண்டனில் இருந்து 1890களில் இந்தியா வந்தார். மெட்ராஸ் மாகாண பொதுப்பணித்துறை பொறியாளராக நியமிக்கப்பட்டார். தென் தமிழகத்தில் வைகை பாசனத்தை நம்பியிருக்கும் மக்கள் மழை பொய்த்து பஞ்சத்தில் தவிப்பதை கண்டு மனம் வருந்தி, முல்லை பெரியாறு அணைக்கான திட்டத்தை உருவாக்கினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது சொத்துகளை விற்று அந்த அணையை கட்டி முடித்தார்.

இவரது நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் மணி மண்டபம் கட்டி தென் தமிழக மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஜான் பென்னி குயிக்கின் சமாதி லண்டனில் இருக்கிறது. இந்நிலையில் லண்டன் சென்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பென்னி குயிக் சமாதியை நேரில் பார்வையிட்டார். அங்கிருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வீடியோவில் அவர், ''இந்த கல்லறைக்கு வந்தததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். பென்னி குயிக் கல்லறையை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு இந்த கல்லறையை சீரமைத்து கொடுப்பதாக உறுதிமொழி அளித்திருந்தது. கல்லறை அருகில் பென்னி குயிக் சிலையை அமைக்க உரிய நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

ஆனால் அதற்கான பணத்தை கட்டவில்லை என்று சர்ச் உறுப்பினர்கள் கூறுகின்றனர். 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கி தந்தவருக்கு இப்படி ஒரு நிலையா? என்று எண்ணி பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இதற்கான சீரமைப்பு வேலைகளை தமிழக அரசு செய்யாவிட்டால், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தெரிவித்து நானே முன் நின்று நிதி ஒதுக்கீடு செய்து வேலைகளை நடத்தி முடிக்க முயற்சி செய்வேன்.ஒருவேளை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இன்று இருந்திருந்தால், அவரிடம் இந்த கோரிக்கை வந்திருந்தால் உடனடியாக செய்து கொடுத்திருப்பார். இருப்பினும் அவர் தலைமையில் அதிமுக ஆட்சி மலரும் போது நிச்சயம் செய்து கொடுப்போம். அதற்கு முன்னதாக என்னுடைய முயற்சியால் மக்களை திரட்டி, அவர்களிடம் நிதி வசூல் செய்து பென்னி குயிக் கல்லறை மற்றும் சிலையை சீரமைப்பேன்'' என செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in