`நீட் பிரச்சினையை பிரதமரிடம் அழுத்தமாக பதிவு செய்தேன்'

14 கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேட்டி
`நீட் பிரச்சினையை பிரதமரிடம் அழுத்தமாக பதிவு செய்தேன்'

"நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் சட்ட முன்வடிவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை இன்று சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த சந்திப்பு குறித்து டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், "முதல்வராக பதவியேற்ற பின் எனது 3-வது டெல்லி பயணம் இது. பிரமதரை சந்தித்து தமிழக அரசு சார்பில் 14 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். சில குறிப்பிட்ட முக்கியமான கோரிக்கைகளை நான் சொல்ல விரும்புகிறேன். இலங்கையில் தற்போது நடந்து வரும் அசாதாரண சூழ்நிலையை நீங்கள் அறிவீர்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிற இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவி செய்வதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், தேவையான அத்தியாவசிய பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளேன்.

அதே நேரத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். தமிழர்களின் பாரம்பர்ய மீன்பிடி உரிமை குறித்தும் வலியுறுத்தியிருக்கிறேன். கச்சத்தீவு மீட்பது குறித்த கோரிக்கையும் வைத்திருக்கிறேன். உக்ரைனில் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் மருத்துவப் படிப்பை இந்தியாவிலேயே தொடர அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எடுத்துவைத்துள்ளேன்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது என்றும் மாநிலங்களுடன் மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாயை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் ஜூன் 2022க்கு பின்பும் ஜிஎஸ்டி இழப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்றும் நரிக்குறவர்கள், குவிக்காரர்கள் சமூகத்தினரை தமிழ்நாட்டு பட்டியலின மற்றும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இப்படி பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்து வைத்துள்ளேன்.

முக்கியமாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் நான் அழுத்தமாக பதிவு செய்தது என்னவென்றால் நீட் பிரச்சினை. நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2-வது முறை நிறைவேற்றி ஆளுநருக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம். ஆனால், இதுவரை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பாமல் இன்னமும் தாமதம் செய்துக் கொண்டிருக்கிறார். இந்த சட்ட முன்வடிவுக்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், தமிழகத்திற்கு வர வேண்டிய வெள்ள நிவாரண நிதி குறித்தும் வலியுறுத்தியிருக்கிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in