`எனக்கு இந்த உலகில் வாழ ஆசை இல்லை'- நித்யானந்தா திடீர் விரக்திக்கு என்ன காரணம்?

`எனக்கு இந்த உலகில் வாழ ஆசை இல்லை'- நித்யானந்தா திடீர் விரக்திக்கு என்ன காரணம்?
நித்யானந்தா

“எனது வாழ்வில் நான் செய்ய வேண்டியதை முழுமையாகச் செய்து முடித்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, உங்களைப் போலவே நானும் பரமசிவன் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என நித்யானந்தா அவரின் பக்தர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா
நித்யானந்தா

கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலவின. அடுத்த சில தினங்களிலேயே ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என முகநூல் பதிவின் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ஆனாலும் நித்யானந்தா உடல் நலக்குறைவால் இருப்பதை அவர் வெளியிட்ட படங்களும், அவர் கடிதமும் உறுதி செய்தன. இந்த நிலையில் மீண்டும் அவர் தன்னுடைய உடல் நிலை குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து முகநூல் பதிவில் தெரிவித்துள்ள நித்யானந்தா, “என்னுடைய உடலில் எம்ஆர்ஐ உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்றன. மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளன. புற்றுநோய், இதயப் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் , அதிக கொலஸ்ட்ரால் என எந்த பிரச்சினையும் இல்லை. வைரஸ் தொடர்பான நோய்கள் எதுவும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாகச் செயல்படுகின்றன. எனது மூன்றாவது கண் மூலம் நோய் கண்டறிதல் சோதனை நடைபெற்றாலும், அவை அலோபதி அமைப்பின் வெளிப்புற இயந்திரங்கள் மூலம் மீண்டும் சரிபார்க்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா கடிதம்
நித்யானந்தா கடிதம்

என்னால் உணவு எதையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. வாயில் உணவை வைத்தால் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுக்கிறது. உறக்கம் முற்றிலுமாக இல்லை. 24 மணி நேரமும் எனது மூளை விழித்துக் கொண்டிருக்கிறது. மனம் இந்த உலகத்தை மறந்துவிடுகிறது. அது நிர்விகல்ப சமாதியில் இறங்குகிறது. சுவாசம் மிகவும் ஆழமற்றதாகிறது. என்னைக் கீழே படுக்க வைத்து, ஆழமாக மூச்சு விடும்படி மருத்துவ சீடர்கள் வற்புறுத்துகிறார்கள். இப்படி ஆறுமாதங்களுக்கும் மேலாக என் உடல் நிர்விகல்ப சமாதியில் இருப்பது வழக்கம். எனவே என் உடல்நிலை பற்றி சீடர்கள் கவலைப்படத் தேவையில்லை. எனது கிரகங்களும் எனக்குச் சாதகமான நிலையில் இருப்பதால், எனக்கு இப்போது மரணமோ, சமாதியோ இல்லை.

கைலாசாவில் சிறிய விமான நிலையம் உள்ளது, ஆனால் பெரிய மருத்துவமனை உள்கட்டமைப்பு இல்லை. அவை இருந்தால் என் உடலை மேம்படுத்திக் கொள்ள முடியும். எனது மருத்துவ பராமரிப்புக்காக எந்த பணத்தையும் பக்தர்கள் அனுப்ப வேண்டாம். எனது பக்தர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது வாழ்வில் நான் செய்ய வேண்டியதை முழுமையாகச் செய்து முடித்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. உங்களை போலவே நானும் பரமசிவன் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in