உங்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருக்கு... பதறிய முதியவர்: தவறான அறிக்கையளித்த தனியார் மருத்துவமனை!

உங்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருக்கு... பதறிய முதியவர்: தவறான அறிக்கையளித்த தனியார் மருத்துவமனை!

முதியவர் ஒருவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாகத் தனியார் மருத்துவமனை ரத்தப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனை மறுத்துவிட்டது. இதையடுத்து அதே நபர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் போது அவருக்கு ஹெச்ஐவி தொற்று இல்லை எனச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் அக்பர் அலி. இவர் கடந்த சில வருடங்களாகவே நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 30.05.2022 அன்று பாளையங்கோட்டை சிஎஸ்ஐ அன்னபாக்கியம் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றார். உங்கள் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால் நீங்கள் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் எனச் சொல்லி அந்த மருத்துவமனையில் அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். மதியம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் அன்று இரவு பத்து மணிக்கு அவருக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக ரத்தப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். இதையடுத்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள், உங்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதால் நாங்கள் உங்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது. நீங்கள் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு செல்லுங்கள் என அவரை வற்புறுத்தி இருக்கிறார்கள். மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்ட அந்த முதியவர் பெரும் அதிர்ச்சியுற்றார்.

இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு ஹெச்ஐவி தொற்று இல்லை எனச் சான்று வழங்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் நடைபெறும் உடல் மற்றும் ரத்தப்பரிசோதனைகள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இந்த விவகாரம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து தனக்குத் தவறான சிகிச்சை அளித்துள்ள சிஎஸ்ஐ அன்னபாக்கியம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்பர் அலி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in