டாஸ்மாக் கடை திறப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை பெரியமேடு குடியிருப்பு பகுதியில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரியமேட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைச் செயலக ஊழியரான மனோகர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

'பெரியமேட்டில் உள்ள நேவல் மருத்துவமனை சாலை பகுதியில்  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், அன்றாடம் கூலி வேலை பார்க்கும் மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரி, மத வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை உள்ளன.

கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இதே பகுதியில் இருந்த ஒரு  டாஸ்மாக் கடை, மக்கள்  போராட்டம் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேவல் மருத்துவமனை சாலையில் தற்போது புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் மேலாண் இயக்குனர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோர் அனுமதி வழங்கி உள்ளனர்.

இந்த கடை செயல்படத் தொடங்கினால் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படக்கூடும். டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே புதிய டாஸ்மாக் கடையை திறக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும், மேலும் தன்னுடைய மனு மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார்

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பெரியமேடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in