தடுப்பணை கட்டும் விவகாரத்தில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தடுப்பணை கட்டும் விவகாரத்தில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நபார்டு கடனுதவியுடன் 38 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23- ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா, கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி கொளத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், " தடுப்பணை கட்ட உத்தேசித்துள்ள பகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்பக்குழு, இந்த இடம் தடுப்பணை கட்ட உகந்ததல்ல என தெரிவித்துள்ளது. மேலும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இந்த பகுதியில் தடுப்பணை கட்டினால், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கொளத்துபாளையத்தில் தடுப்பணையை மாற்றி அமைக்கும்பட்சத்தில் அங்கு நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளதாகவும், இதுசம்பந்தமாக அரசுக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். அதனால் தடுப்பணையை கொளத்துபாளையத்தில் கட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வு, நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in