`ஆக்கிரமிப்புகளை ஜுன் 10-க்குள் இடிக்கவும்'- பங்காரு அடிகளாருக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

`ஆக்கிரமிப்புகளை ஜுன் 10-க்குள் இடிக்கவும்'- பங்காரு அடிகளாருக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

மேல்மருவத்தூரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து வருவாய்த் துறையினர் வருகின்ற 8-ம் தேதி அந்த கட்டிடங்களை இடிக்க உள்ளனர்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, வணிக பயன்பாட்டுக் கட்டிடங்கள் உள்ளிட்டவை மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 ராஜா
ராஜா

உயர் நீதிமன்றத்தில் ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில், ``மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிகக் கட்டிடங்கள், வாகன நிறுத்துமிடம், சித்தர் பீடத்தின் சில பகுதிகள் என எல்லாமே அரசு புறம்போக்கு நிலங்களிலும், நீர்நிலைகளிலும் கட்டப்பட்டிருக்கின்றன. மேல்மருவத்தூர் ஏரியில் அடிகளார் திருமண மண்டபத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரியிலேயே கார் பார்க்கிங், கட்டணக் கழிப்பிடம், ஜெனரேட்டர் அறை உள்ளிட்டவை வருவதால் அடிகளார் திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்று பெறவில்லை. ஆனால் அந்த திருமண மண்டபம் பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சோத்துப்பாக்கம் நீர்நிலைகளில் வீடுகளும் கடைகளும் கட்டப்பட்டிருக்கின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பழைய நிலைக்கு நீர்நிலைகளைக் கொண்டு வரவேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து ராஜாவுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனாலும் நீர் நிலைகளை அகற்றுவதற்காகத் தீவிரமாக அவர் போராடி வந்தார். இந்த நிலையில் கடந்த 22.03.22 அன்று மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏப்ரல் மாதத்திற்குள் இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே இருந்தனர். இந்நிலையில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பாக ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்க கோரி மனு செய்தனர்.

ஏற்கெனவே பிறப்பித்த நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை இடிக்காத காரணத்தினால் ஜூன் 10-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை இடித்துவிட்டு, 15-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்பிற்கு உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வரும் ஜூன் 8-ம் தேதி மேல்மருவத்தூர் ஏரி நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு உள்ள 13 குடியிருப்பு வீடுகள் மற்று அடிகளார் திருமண மண்டபத்தின் சில பகுதிகளை அகற்றச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஜூன் 8-ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேல்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in