
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்ற பொதுப்படையான உத்தரவைப் பிறப்பிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கோயில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையாக ஆடை அணிவதில்லை என்பதால், கோயிலின் புனிதத்தைக் காக்கும் வகையில், ஆடைக் கட்டுப்பாடு விதித்து, கோயில்கள் முன் அறிவிப்புப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், பிற மதத்தவர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் அதுபோன்ற பலகைகள் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், சில புகைப்படங்களைத் தாக்கல் செய்து, இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் முறையற்ற வகையில் ஆடைகளை அணிந்து செல்வதாகக் குற்றம்சாட்டினார். ஒவ்வொரு கோயிலிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டால் போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதிகள், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆடை கட்டுப்பாடு உள்ளது என்பதால், ஆடைக் கட்டுப்பாட்டு அமலில் உள்ள கோயில்களில் மட்டும் அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
அதேசமயம் அனைத்து கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் எனப் பொதுப்படையான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், கோயில்களுக்கு பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வர வேண்டும் என்றும், இதை கோயில் நிர்வாகங்கள் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.