`மார்ச் 4ல் அதிகனமழை பெய்யும்'- தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்

`மார்ச் 4ல் அதிகனமழை பெய்யும்'- தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழ்நாட்டில் வரும் 4ம் தேதி அதிகனமழை பெய்ய இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெற்கு வங்கக் கடலின் மத்திய கிழக்கு மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

4-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும். சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 6ம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

4ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in