கவனம்... கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
கவனம்... கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று நல்லமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் இன்னும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக - வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரை இன்று முதலே மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 11-ம் தேதி, தமிழகம், புதுவை, காரைக்கால் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்யும். ஏப்ரல் 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

12 செ.மீ மழை

தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் 12 செ.மீ மழை பதிவானது. ஏப்ரல் 10, 11-ம் தேதிகளில் தமிழகக் கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரளக் கடல்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலத்தில் பெய்துவரும் இந்த மழையினால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துவருகிறது.

Related Stories

No stories found.