
தொடர் கனமழை காரணமாக கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மற்றும் நீலகிரியில் 4 தாலுகாக்களில் மட்டும் (உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா) தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களின் ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.